மஇகா: இடைத் தேர்தலில் போட்டியிடாததற்கு ஆலய விவகாரம் ஒரு காரணம்

மஇகா கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வர, நவம்பர் 27-இல் நிகழ்ந்த சுபாங் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரமும் அதில் தீயணைப்புப் படைவீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிம் இறந்து போனதும்தான் காரணம்.

“சீபீல்ட் பிரச்னை காரணமாக மலாய் வாக்காளர்கள் இரு இந்திய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முன்வர மாட்டார்கள்”, என்று மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் கூறினார். அவர் பிஎன் வேட்பாளராக முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ரம்லி முகம்மட் நோர் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஊடகங்களிடம் பேசினார்.

ஆலய விவகாரம் போக, முன்னாள் கேமரன் மலை எம்பி சி.சிவராஜ் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மஇகாவின் நம்பிக்கையை 50 விழுக்காடு குறைத்து விட்டது.

சிவராஜ் பல ஆண்டுகளாக அத்தொகுதியில் பணியாற்றி வந்தவர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐந்து-முனைப் போட்டியை எதிர்நோக்கிய சிவராஜ், எதிர்த்த நால்வரையும் தோற்கடித்து 597 வாக்குகளில் வெற்றி பெற்றார்.

நவம்பர் மாதம் தேர்தல் நீதிமன்றம், தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டதாகக் கூறி தேர்தல் முடிவு செல்லாது எனத் தீர்ப்பளித்து இடைத் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டது.