தேச நிந்தனைச் சட்டம் 1948, தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை அறிந்தும், மௌனமாக இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களை, வழக்குரைஞர் என் சுரேந்திரன் சாடினார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, அந்தத் தலைவர்கள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தனர் என்றும் சுரேந்திரன் சொன்னார்.
“எதிர்க்கட்சியாக இருந்தபோது, தேசநிந்தனைச் சட்டத்தை எதிர்த்து நின்ற ஹராப்பான் தலைவர்களுக்கு என்னவானது?
“தற்போது அவர்கள்தானே அரசாங்கத்தில் இருக்கின்றனர்? அவர்களின் மௌனம் வெட்கக்கேடாக இருக்கிறது,” என்று அந்த முன்னாள் எம்பி தனது டுவிட்டர் செய்தியில் இன்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர், அம்பிகா சீனிவாசனும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், 70 ஆண்டுகால தேச நிந்தனைச் சட்டத்தை அகற்ற வேண்டுமென தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில், சமூக ஊடகத்தில், முன்னாள் யாங் டி-பெர்த்துவான் அகோங்கை அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டி, தனிநபர்களுக்கு எதிராக தேசநிந்தனை சட்டம் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி, ‘லோயர்ஸ் ஃபோர் லிபர்டி’-யின் (எல்.ஃப்.எல்) விவாதங்களைப் பற்றி இருவரும் கருத்து தெரிவித்தனர்.
எல்.ஃப்.எல். நிர்வாக இயக்குநர், இலத்தீபா கோயா, இந்தச் சம்பவம் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான ‘பிஎன்-இன் சகிப்புத்தன்மையற்ற நிர்வாகத்தை’ நமக்கு நினைவுறுத்துகின்றது என்று கூறியிருந்தார்.