மகாதிர்: வளம் இனங்களிடையே சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்

நாட்டின் வளம் எல்லா இனங்களுக்கிடையிலும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவது அவசியம் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார்.

புத்ரா ஜெயாவில் பிரதமர்துறையின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமிடையில் பெரிய இடைவெளி நிலவிய நாடுகளில் பதற்றங்கள் மேலோங்கிக் கலவரங்களில் போய் முடிந்துள்ளன என்றார்.

“அதனால்தான் நாம் எல்லா இனங்களின் சமுதாய வறுமையை ஒழிப்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

“அந்த வகையில் வளத்தைச் சமமாக அல்லது குறைந்த பட்சம் எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் பகிர்ந்தளிப்பது நமது கடமையாகியுள்ளது”, என்றவர் சொன்னார்.

“சம உரிமையை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தலில் மட்டும் கடைப்பிடிப்பது போதாது. எல்லா இனங்களுக்குக்கிடையிலும் தகுதியில், வாழ்க்கை வசதியில், அமைதியான வாழ்க்கையில், வளத்தில் சமத்துவம் காணத் தவறினால் தேச நிர்மாணிப்பில் வெற்றி பெற்றவர்களாக நம்மைக் கருதிக்கொள்ள முடியாது”, என்று மகாதிர் கூறினார்