இந்த வியாழனன்று, அரசியல் அரங்கிற்குத் திரும்புகிறார் ஜாஹிட்

அம்னோ தலைவர் பதவியிலிருந்து, 2 மாதங்கள் ஓய்விலிருந்த அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இந்த வியாழனன்று மீண்டும் அரசியலுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது டுவிட்டர் இடுகையில், ஜாஹிட் அவரது நாடாளுமன்ற தொகுதியான பாகான் டத்தோவில் நடக்கவிருக்கும், அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்பு தொடர்பான கருத்தரங்க பதாகை ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.

 

பாகான் டத்தோ அம்னோ தொகுதி தலைவரான ஜாஹிட், அதே தொகுதி பாஸ் தலைவரான மிஷாபுல் முனிர் மஸ்டுக்கியுடன், அரங்கத்தைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக அப்பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாஹிட்டின் இறுதி நிகழ்ச்சி, கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி, அம்னோ உறுப்பினர்களுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்ச்சியில், அவர் தனது தலைவர் பதவியைத் துணைத் தலைவரிடம் ஒப்படைத்து, ஓய்வில் செல்லவுள்ளதாக அறிவித்தார்.

அதன் பிறகு, அவரை எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிகளிலும் காணமுடியவில்லை.

முன்னதாக, ‘அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை’ என்று முகமட் கூறும்போது அல்லது ‘என் கடமைகளையும் பொறுப்புகளையும் என்னால் தொடர முடியும்’ என்று நம்பும்போது, பணிக்குத் திரும்புவேன் என்று அவர் கூறியிருந்தார்.