முஹைடின்: 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியமான தேர்தல்

மலாய்க்காரர்களுடைய ஆட்சியுரிமையை நிலை நிறுத்த என்ன விலை கொடுத்தாவது புத்ராஜெயாவைத் தற்காக்குமாறு அம்னோ, தனது மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வாறு வேண்டுகோள் விடுத்த அம்னோ துணைத் தலைவர் முஹடின் யாசின், அம்னோ இப்போது கடுமையான கால கட்டத்தில் இருப்பதாகச் சொன்னார். அவர் நேற்றிரவு அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றினார்.

“13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்கள் வீழ்ச்சி காண்பார்களா அல்லது எழுச்சி அடைவார்களா என்பதை நிர்ணயிக்கப் போவதால் அந்தத் தேர்தல், இது வரை நிகழ்ந்துள்ள அனைத்துத் தேர்தல்களையும் விட முக்கியமானது”, என்றார் அவர்.

“அரசியல் அதிகாரம் தொடர்ந்து நமது கரங்களில் இருக்குமா அல்லது மற்றவர்களிடம் போய் விடுமா?”, என அவர் வினவினார்.

“அரசியல் அதிகாரம் இழக்கப்பட்டு புத்ராஜெயாவை எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதைக் காண நீங்கள் விரும்புகின்றீர்களா? மலாய்க்காரர்கள் தங்கள் சொந்த மண்ணில் அதிகாரத்தை இழப்பதைக் காண நாம் தயாராக இருக்கிறோமா? நிச்சயம் அதற்குப் பதில், இல்லை என்பதாகும்.

அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளிடம் முஹைடின் உரையாற்றினார்.

அடுத்து வரும் தேர்தலில் என்ன விலை கொடுத்தாவது அம்னோவையும் பிஎன் -னையும் தற்காப்பதற்கு ஒன்று திரளுமாறு அந்த மூன்று அமைப்புக்களின் உறுப்பினர்களையும் அவர் வேண்டிக் கொண்டார்.

இன்றைய அரசியல் வடிவமைப்பு மாறி விட்டது எனக் குறிப்பிட்ட முஹைடின் அதில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றார். ஆகவே அம்னோ இளைய தலைமுறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

“அம்னோ தலைவர்கள்- இளைய தலைமுறையினர் அம்னோவுக்கு பங்காற்ற வழி விட வேண்டும். இளைய தலைமுறையின் ஆதரவு இல்லாமல் அம்னோ நிலைத்திருக்க முடியாது. ஆகவே அவர்களுக்கு வழி காட்டுங்கள்.”

வேட்பாளர்களை தலைவர்கள் முடிவு செய்ய அனுமதியுங்கள்

வேட்பாளர்கள் கட்சியின் ஆயுதங்கள், அவர்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதோடு அவர்கள் மீது முழு நம்பிக்கையும் வைக்க வேண்டும் என்றும் முஹைடின் கேட்டுக் கொண்டார்.

வேட்பாளர்கள், கல்வி கற்றவர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் மக்களுக்கு அணுக்கமானவர்களாகவும் உண்மையானவர்களாகவும் உயரிய நெறிமுறைகளைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.”

“தேர்தலின் போது பின் வாங்க வேண்டாம். சதி செய்ய வேண்டாம். தீமை செய்ய வேண்டாம்.  முதுகில் குத்த வேண்டாம். கட்சி வெற்றி பெறுவதற்கு உள்ள வாய்ப்புக்களை தடுக்க வேண்டாம். வரும் தேர்தல் நாம் நிலைத்திருப்பதை உறுதி செய்யும் போட்டியாகும். அது தனிப்பட்ட முறையில் வெற்றி பெறுவது அல்ல. கட்சி என்னும் முறையில் கூட்டு வெற்றி ஆகும்,” என்றும் அந்த அம்னோ துணைத் தலைவர் சொன்னார்.

“மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்களுடைய நாடித் துடிப்பை உணருங்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாம் அவர்களுடைய கண்களாகவும் காதுகளாகவும் குரலாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட மேலானது மக்களுக்கு உதவி செய்ய நம்மை உளப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்வதாகும்.”

TAGS: