“பக்காத்தான் ஏமாற்றி விட்டது”

அமைதிப் பேரணி மசோதாமீதான விவாதத்தின்போது வெளிநடப்புச் செய்தது அம்மசோதாவுக்கு எதிர்ப்புக் காட்டும் செயல் என்று பக்காத்தான் எம்பிகள் நியாயப்படுத்துகிறார்கள் ஆனால், இன்னொரு தரப்பினர் அதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்  . அவர்களில் ஒருவர், நேற்றிரவு,ஜாலான் பார்லிமென்-னில்  ‘நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு’ திட்டத்தின்கீழ்  20 இளைஞர்களுடன் கூடி நின்ற  மெலிஸா லூவி.

“மற்ற வாக்காளர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.ஆனால், மாற்றரசுக் கட்சியை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ள நான் என் எம்பியும் அவரின் சகாக்களும் வெளிநடப்புச் செய்ததை நினைத்து வெறுப்படைந்து போனேன். இதைச் செய்வதற்காகவா அவர்களை எம்பிகள் ஆக்கவில்லை”, என்றவர் கூறினார்.

“எதிர்த்து வாக்களிப்பதால் மசோதாவைத் தடுத்திருக்க முடியாதுதான். தடுப்பது இரண்டாம் பட்சம்தான்.மசோதா நிறைவேற்றப்பட்டபோது வேறு எங்கோ இல்லாமல் அவையிலேயே இருந்து தங்கள் வாக்காளர்களின் கருத்தை அவர்கள் புலப்படுத்தியிருக்க வேண்டும் ”.

வாக்காளர்கள் தத்தம் எம்பி-களிடம் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளும் ‘ஹல்லோ எம்பி’இயக்கத்தில் பங்குகொண்டதெல்லாம் வீணாகிப் போனதாக மெலிஸா கூறினார்.

“எம்பிகளைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் மசோதாவுக்கு எதிராக  வாக்களிப்பதாய்க் கூறினர்”, என்றாரவர்.

அங்கிருந்த மற்றவர்களும் மெலிஸா சொல்வதே சரி என்றார்கள். எம்பிகள் தங்கள் எதிர்ப்பை மேலும் கடுமையாக புலப்படுத்தியிருக்க வேண்டும், கடைசி பட்சமாகத்தான் வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

பிஎன் எம்பிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

“பிஎன் எம்பிகளும்தான் காலை வாறி விட்டிருக்கிறார்கள். அமைச்சரவையும் ஏமாற்றி விட்டது.நாடாளுமன்றத்தில் அவசரம் அவசரமாக அம்மசோதா கொண்டுசெல்லப்பட்ட விதமே அவர்களுக்கு வாக்களித்த மக்களை ஏளனப்படுத்துவதுபோல் இருக்கிறது”, என்றாரவர்.

தங்கள் எம்பி-களைக் கட்சிக் கொறடாக்களை எதிர்த்து வாக்களிக்க வைக்கும் முயற்சி வெற்றிபெறாததால் ஏமாற்றமடைந்த அந்த ‘நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு’ குழுவினர் பிரதிநிதித்துவ ஜனநாயகம் இறந்துவிட்டதாகக் கூறி அந்த இறப்பின் அடையாளமாக அடுத்த இரண்டு நாள்களுக்கு ‘விழித்திருந்து ஈமச்சடங்கு’ நடத்துவதென்றும் முடிவு செய்துள்ளனர்.

முக்கியமான விவகாரங்களில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதன் பொருட்டு மற்ற சிவில் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

“(அமெரிக்காவின்) கலிபோர்னியாவில் மக்களிடமிருந்து ஒரு மில்லியன் கையெழுத்து பெற்றால் சட்டத்தையே மாற்றி எழுதலாம்”, என்று அக்குழுவைச் சேர்ந்த பூன் கியான் மெங் தெரிவித்தார்.

டேவான் நெகாராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைதிப்பேரணி மசோதா விரைவில் சட்டம் ஆகிவிடும் என்றாலும் அக்குழு அதைத் தொடர்ந்து எதிர்ப்பது என்று முடிவு செய்துள்ளது.

அதன் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை டாட்டாரானில் செய்ததுபோல் வரும் சனிக்கிழமை கேஎல்சிசி-இல் கூடுவர்.