வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அனைவருமே தலத்தில் இல்லா வாக்காளர்கள் என்ற முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் அதன் பூர்வாங்க அறிக்கையில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது.
இப்போதைக்கு, வெளிநாடுகளில் பணி நிமித்தம் உள்ள அரசு ஊழியர்களும் மாணவர்களுமே அவ்வாறு வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இராணுவத்தினர், போலீசார் ஆகியோருக்கும் அவர்களின் துணைவி-துணைவர்களுக்கும் உள்ள அஞ்சல்வழி வாக்களிப்புமுறையை, முன்கூட்டிய வாக்களிப்புமுறையாக மாற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக்கொள்கிறது.
என்றாலும் இராணுவத்தினர் அல்லது போலீசார் கேட்டுக்கொண்டால் அவர்கள் அஞ்சல்வழி வாக்களிக்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களின் துணைவியர்-துணைவர்களுக்கு அந்த உரிமை கிடையாது.
வாக்களிக்கும் நாளில் பணிபுரியும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், மருத்துவர்கள், தாதியர், செய்தியாளர்கள் போன்றோரும் முன்கூட்டி வாக்களிக்க அனுமதிக்கலாம்.
“வாக்களிப்பு நாளில் தங்கள் தொகுதிகளில் இல்லாதவர்களுக்கு(சாபா, சரவாக்கில் உள்ளவர்கள், தீவகற்பத்திலும், இங்குள்ளவர்கள் அங்கும் வசித்தால்)அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தங்கள் தொகுதிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்துகொடுக்கவும் குழு பரிந்துரை செய்கிறது”, என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அழியா மை
மேலும், தேர்தலில் அழியா மை பயன்படுத்த அரசமைப்புத் திருத்தம் தேவையில்லை என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் கூறியிருப்பதுடன் உடன்படும் பிஎஸ்சி, 13வது பொதுத் தேர்தலிலேயே அதை நடைமுறைக்குக் கொண்டுவருமாறு இசி-யைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.இதற்குத்தான் தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே-யும் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்துள்ளது.
“இதற்கு அரசமைப்புத் திருத்தமின்றி தேர்தல் விதிகளில் சில திருத்தங்களைச் செய்தால் போதுமானது என்று குழு கருதுகிறது. இசி, இம்மாற்றத்தை அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றும் அது கேட்டுக்கொண்டது.
இவை தவிர,வேறு பல பரிந்துரைகளையும் அவ்வறிக்கை கொண்டிருக்கிறது.
– தொடர் எண்கள் அடிக்கட்டையில் இருக்கலாம், வாக்குச் சீட்டில் இருக்கக்கூடாது.வாக்குகள் இரகசியாக இருப்பதை உறுதிசெய்ய அது அவசியம்.
-மாற்றுத்திறனாளர்களுக்கு(எ-டு கண்பார்வை தெரியாதவர்கள்) 21 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் உதவ அனுமதிக்கப்பட வேண்டும்.
இப்படி பலவேறு பரிந்துரைகள் அந்த 115-பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.