அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ அமைக்க தேர்தல் குழு பரிந்துரை

சபாவில் அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு வாக்களிப்பதற்கான உரிமை கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை விசாரிக்க ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்னும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

பிஎஸ்சி சமர்பித்துள்ள இடைக்கால அறிக்கையில் அந்தத் தகவல் காணப்படுகிறது.

கடந்த வாரம் கோத்தா கினாபாலுவில் நடத்தப்பட்ட பொது விசாரணையில் அடையாளக் கார்டு திட்டம் மீது பல புகார்கள் கூறப்பட்டதைத் தொடர்ந்து பிஎஸ்சி அவ்வாறு யோசனை கூறியுள்ளது.

“அந்த விவகாரம் குழுவுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கு அப்பால் இருந்தாலும் அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதே அந்தப் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வைத் தர முடியும்”, என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறப்படுவது மீது விசாரணை செய்யப்பட வேண்டும் என பிஎஸ்சி கேட்டுக் கொள்ளும் என மலேசியாகினி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

1980களிலும் 1990களிலும் அம்னோவுக்குச் சாதகமாக மக்கள் தொகை விகிதாச்சாரத்தை மாற்றும் நோக்கத்துடன் அந்நியர்களுக்கு அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்ட மறைமுகமான நடவடிக்கையே அடையாளக் கார்டு திட்டம் எனக் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 25ம் தேதி கோத்தாகினாபாலுவில் பிஎஸ்சி நடத்திய விசாரணையின் போது அந்தக் கூற்று மீது ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டும் என அம்னோவைத் தவிர அனைத்து பிஎன் உறுப்புக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின.

வாக்காளர் பட்டியலை தணிக்கை செய்க

சபா வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து பெயர்களையும் மறு உறுதி செய்யுமாறு அந்த இடைக்கால அறிக்கை தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்தது.

வாக்காளர் பட்டியலில் உள்ள மற்ற விஷயங்கள் மீது தணிக்கை செய்ய அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சின் கீழ் இயங்கும் மிமோஸ் பெர்ஹாட் நியமிக்கப்பட வேண்டும் என பிஎஸ்சி தெரிவித்தது.

அதன் பணிகள்:

ஒரே அடையாளக் கார்டைக் கொண்ட இரண்டு நபர்கள்
காலமான வாக்காளர்கள். ஆனால் பட்டியலில் இன்னும் பெயர்கள் உள்ளன.

90 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய வாக்காளர்கள்,
உள்ளூர் சாராத வாக்காளர்கள், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் , வாக்களிப்பதற்கு தகுதி இழந்த வாக்காளர்கள், முகவரி மாற்றத்தைக் கோரும் எந்த வாக்காளரும் சத்தியப் பிரமாணத்தையும் அனுப்ப வேண்டும் என தேர்தல் ஆணையம் கோர வேண்டும் என மாக்ஸிமுஸ் ஜானிட்டி ஒங்கிலி தலைமையிலான அந்தக் குழு யோசனை கூறியது.

மற்ற பரிந்துரைகள்:

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை காட்சிக்கு வைக்கும் காலம் 7  நாட்களிலிருந்து 14 நாட்களாக கூட்டப்பட வேண்டும்.

துணை வாக்காளர் பட்டியல் மீது தெரிவிக்கப்படும் ஒவ்வொரு ஆட்சேபத்துக்கும் 10 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். ஆட்சேபங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிப்பதையும் தேர்தல் ஆணையம் ரத்துச் செய்ய வேண்டும்.

பாஸ் ஏற்கனவே துணை வாக்காளர் பட்டியலை கண்காணித்து பல ஆட்சேபங்களைச் சமர்பித்துள்ளது.  அதனால் அது ஆயிரக்கணக்கான ரிங்கிட் கட்டணம் செலுத்தியுள்ளது.

கோலாலம்பூரிலும் கோத்தா கினாபாலுவில் பிஎஸ்சி நடத்திய இரண்டு பொது விசாரணைகளின் தொகுப்பாக அந்த இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது. அது இன்று பின்னேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

சரவாக், கிளந்தான், ஜோகூர் பாரு ஆகியவற்றிலும் பொது விசாரணைகளுக்கு பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது. அவற்றின் முடிவில் அது முழு அறிக்கையை வழங்கும்.