‘குறைந்த கட்டணம்’ என்னும் கோட்பாட்டை எம்ஏஎச்பி என்னும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் புரிந்து கொண்டுள்ளதா என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு குறைந்த கட்டண விமான முனையத்துக்கு பதிலாகக் கட்டப்படும் கேஎல்ஐஏ2-ன் கட்டுமானச் செலவுகள் இரண்டு பில்லியன் ரிங்கிட்டிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து 3.9 பில்லியன் ரிங்கிட்டாகியிருப்பதால் அவர் அவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கேஎல்ஐஏ2ல் கூடுதலாக அமைக்கப்படவிருக்கும் வசதிகளில் மிகப் பெரிய ஏ 380 ரக விமானங்களுக்கான ஏற்பாடுகள், தானியங்கி நடைபாதைகள், பெட்டிகளை கையாளுவதற்கு முழுமையான தானியங்கி வசதிகள், கடைத் தொகுதி ஒன்று, நான்கு ஹோட்டல்கள் ஆகியவையும் அடங்கும்.
“உண்மையில் எம்ஏஎச்பி நடப்பு முனையத்தைக் காட்டிலும் 80 விழுக்காடு பெரிய முனையத்தை கட்டுகிறது. அதனால் அந்த முனையம் குறைந்த கட்டண விமானச் சேவைகளுக்கான புதிய முனையமாகத் திகழாமல் நடப்பு கேஎல்ஐஏ முனையத்துக்கு மாற்றாக விளங்கப் போகிறது என்னும் தோற்றத்தைத் தருகிறது,” என புவா இன்று விடுத்த அறிக்கை கூறியது.
“தொடக்கத்தில் 30 மில்லியன் பயணிகளை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்ட புதிய முனையம் 45 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் வகையில் மேம்படுத்தப்படுகிறது. அதே வேளையில் 25 மில்லியன் பயணிகளைக் கையாளுவதற்கு வசதிகளைக் கொண்ட கேஎல்ஐஏ- முனையத்தை 18.7 மில்லியன் பயணிகள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.”
“ஆடம்பரமான தோற்றத்துக்கு பெரிய அளவில் பணத்தைச் செலவு செய்வதற்கு உள்ள ஆசையால், வான் போக்குவரத்துத் துறையில் உருமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான உண்மையான அரிதான வாய்ப்பை மலேசியா இழந்து கொண்டிருக்கிறது.”
எம்ஏஎச்பி-யின் கவனக்குறைவான செலவுகள் குறித்து கஸானா, அரசாங்கம் ஆகியவை உட்பட அதன் பங்குதாரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் புவா கேட்டுக் கொண்டார்.
“கேஎல்ஐஏ2க்கு எம்ஏஎச்பி, அதிகமாக செலவு செய்யாதிருந்தால் விமான நிலையக் கட்டணத்தை குறைந்த கட்டண விமான முனையத்தில் 25 ரிங்கிட்டிலிருந்து 32 ரிங்கிட்டாகவும் முக்கிய முனையத்தில் 41 ரிங்கிட்டிலிருந்து 65 ரிங்கிட்டாகவும் உயர்த்தியிருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்காது என்று கூட ஒருவர் வாதாடலாம். அந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டதின் விளைவாக மலேசியாவின் போட்டி ஆற்றல் குறைந்துள்ளது.”
இந்த வட்டாரத்தில் உள்ள தனது போட்டியாளர்களான சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் ஆகியவற்றைக் காட்டிலும் குறைந்த அளவிலான பயணிகளுக்கே சேவை செய்வதாக குறிப்பிட்ட புவா, கட்டணங்களை உயர்த்துவதற்குப் பதில் எம்ஏஎச்பி தனது திறமையை உயர்த்துவதற்கு முயல வேண்டும் என்றார்.