ஏர் ஏசியாவின் அனைத்துலகப் பயணங்களுக்கான பயணிகள் சேவைக் கட்டணம் உயருகிறது

அதிகரிக்கப்பட்ட விமான நிலைய வரி எனப் பொதுவாக அழைக்கப்படும் பயணிகள் சேவைக் கட்டணம், நாளை டிசம்பர் முதல் தேதி தொடக்கம் தனது அனைத்து அனைத்துலக விமானப் பயணங்களுக்கும் அமலுக்கு வருவதாக ஏர் ஏசியா பெர்ஹாட் அறிவித்துள்ளது.

லங்காவி, கூச்சிங், பினாங்கு அனைத்துலக விமான நிலையங்களிலிருந்து புறப்படும் எல்லாப் பயணங்களுக்கும் நாளை தொடக்கம் நபர் ஒன்றுக்கு வசூலிக்கப்படும் விமான நிலையக் கட்டணம் 51 ரிங்கிட்டிலிருந்து 65 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது என ஏசியா வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையம் (முனையம்2), கேஎல்ஐஏ குறைந்த கட்டண விமான முனையம் ஆகியவற்றில் புதிய கட்டணம் 32 ரிங்கிட். பழைய கட்டணம் 25 ரிங்கிட்.

எம்ஏஎச்பி என்ற மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்-டுக்காக ஏர் ஏசியா, அந்த விமான நிலையக் கட்டணத்தை வசூலிக்கிறது. ஆகவே திருத்தப்பட்ட விமான நிலைய வரி மீதான கேள்விகளை பயணிகள், எம்ஏஎச்பி தலைமை நிர்வாக அதிகாரிக்கு [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம் அல்லது  www.malaysiaairports.com.my/index.php/contact-us/284.html என்னும் இணையத் தளத்தில் கிடைக்கும் பாரத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

பெர்னாமா