தேசிய ஃபீட்லோட் கர்ப்பரேசன்(என்எப்சி), அரசாங்கம் கொடுத்த ரிம250மில்லியன் கடனைக்கொண்டு ஆடம்பர கொண்டோ வாங்கியதை அம்பலப்படுத்திய பிகேஆர், இன்று இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவலையும் வெளியிட்டது. அந்தக் கடனில் ஒரு பகுதி நிலம், ஆடம்பர கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்கும் செலவிடப்பட்டிருக்கிறது.
என்எப்சியின் நிதி ஆவணங்கள், அதன் துணை நிறுவனமான நேசனல் மீட் அண்ட் லைப்ஸ்டோக் கார்ப்பரேசனுக்கு(என்எம்எல்சி) புத்ரா ஜெயாவில் இரண்டு துண்டு நிலங்கள் வாங்க 2009 டிசம்பரில் ரிம3,363,507 கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்பிப்பதாக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிசி ரம்லி(வலம்) கூறினார்.
“புத்ரா ஜெயாவில் அந்த நிலங்கள் (PT1886 and PT1887) வாங்கப்பட்டது நிச்சயமாக மாடு வளர்புக்காக இருக்காது”, என்றவர் குத்தலாகக் கூறினார்.
பங்சாரில் தலா ரிம6.9மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஆடம்பர கொண்டோமினியம் வாங்கப்பட்டதுபோலவே இந்த நிலங்களும் என்எம்எல்சி மூலமாகத்தான் வாங்கப்பட்டன. இந்த நிறுவனம் என்எப்சி போல் அல்லாது முழுக்க முழுக்க மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜாலிலின் குடும்பத்தாருக்குச் சொந்தமானது.
இதே முறையில் அந்நிறுவனம் ஓர் ஆடம்பர காரை- மெசிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ்350-ரிம534,622-க்கு வாங்கியுள்ளது. அதற்கு, ஒவ்வொரு மாதமும் பராமரிப்புச் செலவுக்கு ரிம20,000. இதற்கான பணம் எல்லாம் என்எப்சி கணக்கிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் அரசாங்கத்துக்கு என்எப்எல்சி-யை மேற்பார்வை செய்யும் அதிகாரம் இல்லை என்றார்.
“என்எப்எல்சி ஒரு தனியார் நிறுவனம். நிதி அமைச்சுக்கு என்எப்சி-இல்தான் பங்குண்டு. அதில் ஏதாவது கோளாறு என்றால் அரசு தலையிடும். ஆனால், என்எம்எல்சி 100க்கு100 விழுக்காடு அவர்களுக்கு(ஷாரிசாட் குடும்பத்தாருக்கு)ச் சொந்தமானது.”
முன்னதாக, என்எப்சி-யால் அமர்த்தப்பட்ட சில குத்தகையாளர்களைச் சந்தித்ததாக சைபுடின் தெரிவித்தார். அவர்கள் தங்களுக்குரிய பணம் கொடுக்கப்படாததால் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் என்றாரவர்.
“கொடுக்கப்பட வேண்டியது சில ஆயிரங்கள்தான். அதைக் கொடுக்க முடியவில்லை, 1/2 மில்லியனுக்கு ஆடம்பர கார் வாங்குகிறார்கள்”, என்றாரவர். அந்நிறுவனம் வாங்கிய நிலங்கள் பிரிசிங்ட் 10-இல் இருப்பதாகவும். அது தூதரகங்கள் நிரம்பிய ஓரிடம் என்றும் அவர் தெரிவித்தார்.
ரபிசி, இன்னொரு தகவலையும் வெளியிட்டார். சிஐஎம்பி இஸ்லாமிய பேங்கில் என்எப்சி பெயரில் உள்ள கணக்கிலிருந்து(141640000066107) இம்பியான் குளோபல் நெட்வொர்க் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஜனவரிக்கும் ஜூலை மாதத்துக்குமிடையில் 15 காசோலைகள்வழி ரிம455,423 கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அது, பண்டுங், சிங்கப்பூர், பாலி ஆகியவற்றுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் ஒரு நிறுவனம்.
அதற்குப் பணம் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக காசோலைகளின் எண்கள், கொடுக்கப்பட்ட தொகை, தேதி ஆகியவையும் காண்பிக்கப்பட்டன.
இவற்றுக்கெல்லாம் ஷாரிசாட் பதில் சொல்லி ஆக வேண்டும் என்றாரவர்.
“அம்பலப்படுத்தப்பட்ட ஒவ்வொன்றுக்கும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். மக்களுக்கு இல்லை என்றாலும் அம்னோ பேராளர்களிடமாவது விளக்க வேண்டும். அவர்களும் மக்களில் ஒரு பகுதியினர்தானே”, என்றாரவர்.
ஷரிசாட்டின் கணவரும் என்எப்சியின் நிர்வாகத் தலைவருமான முகம்மட் சாலே இஸ்மாயில், இந்த விவகாரங்களில் தங்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.