நேற்று வரையில் அம்னோ உறுப்பினர் எண்ணிக்கை 3,297,358 ஆகும். சபா மாநிலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அதாவது 487,447 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அந்த விவரங்களை அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் இன்று அம்னோ பொதுப் பேரவையில் தெரிவித்தார்.
சபாவில் உள்ள சிலாம் தொகுதியில் மட்டும் மொத்தம் 44,440 பேர் அம்னோ உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் அங்கு தான் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
கோத்தா திங்கி பெல்டா ஆயர் தாவார் 2 கிளை, மொத்தம் 1,631 உறுப்பினர்களுடன் அம்னோ கிளைகளில் மிகப் பெரியதாகத் திகழ்கிறது.
முக நூல் என்ற பேஸ் புக் என்னும் சமூக இணையத் தளத்தில் “மீடியா அம்னோ மலேசியா” என்னும் பெயரில் தனது பக்கத்தை அமைத்துக் கொண்டுள்ளதின் மூலம் அம்னோ புதிய ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளது என்றும் அவர் சொன்னார். டிவிட்டரில் “அம்னோ ஆன்லைன்” என்ற பகுதியையும் அம்னோ உருவாக்கியுள்ளது. குறுந்தகவல் சேவை வழியாகவும் அது தகவல்களை பரப்பி வருகிறது என்றும் தெங்கு அட்னான் தெரிவித்தார்.
மொத்தம் 2,711 அம்னோ பேராளர்கள் பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ளனர்.
வங்காள தேசம், பாலஸ்தீனம், சிங்கப்பூர், இந்தோனிசியா ஆகியவை உட்பட 24 நாடுகளைச் சேர்ந்த 26 அரசியல் கட்சிகளின் 78 பேராளர்களும் வெளிநாடுகளில் உள்ள 74 அம்னோ மன்றங்களைச் சார்ந்த 64 பேராளர்களும் இவ்வாண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ளனர்.