தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்ற சிறப்புக்குழு (பிஎஸ்சி) அதன் இடைக்கால அறிக்கையில் முன்மொழிந்துள்ள 10 பரிந்துரைகளை அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பல்வேறு அரசாங்க அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்படும்.
இன்று நாடாளுமன்றத்தில் பிஎஸ்சியின் அறிக்கை விவாதிக்கப்பட்டதுடன் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றும் அக்குழுவின் தலைவர் மேக்சிமஸ் ஜோனிட்டி ஓங்கீலி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“அமலாக்கம் செய்யவேண்டியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளோம். அவர்கள் அட்டவணைப்படி அமலாக்கம் செய்து அவற்றின் முன்னேற்றத்தை எங்களுக்குத் தெரிவிப்பார்கள். நாங்கள் அவற்றை கண்காணிப்போம்”, என்று ஓங்கீலி கூறினார்.
பிஎஸ்சியின் இடைக்கால அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்க அமைப்புகள் அவற்றை அமலாக்கம் செய்வதற்கான கால அட்டவணையையும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களையும் தாக்கல் செய்வதற்கு இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
பிஎஸ்சி அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆணை நடப்பில் இருக்கும் வரையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் உத்தரவாதமளித்தார்.
“இக்குழுவுக்கு நான்கு மாத கால அவகாசம் உண்டு. நாங்கள் அமலாக்கத்தைக் கண்காணிப்பதால் அது அதன் நோக்கத்திலிருந்து விலகிச் செல்லாது”, என்றாரவர்.
சில தரப்பினர் வலியுறுத்தியுள்ளதுபோல் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றுக்குள் அமலாக்கம் செய்வது சாத்தியமா என்று வினவியபோது, “அது அதிகப்படியான கோரிக்கை” என்று அவர் பதிலளித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் இவ்வறிக்கை மீது நடந்த விவாதத்தில் ஒரு சில சிறிய விவரங்கள் பற்றிய கருத்துகள் கூறப்பட்டதைத் தவிர வேறு எந்த ஒரு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டவில்லை என்பதோடு அறிக்கையை இரு தரப்பினரும் ஆதரித்தனர்.
பத்து பரிந்துரைகள்:
1. அழியா மை அறிமுகம்;
2. பாதுகாப்பு பணியாளர்கள், ஆயுதப் படையினர் ஆகியோர் முன்னதாக வாக்களிக்கும் முறை அமலாக்கம்; அதனை இதர அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கும் விரிவுபடுத்துதல்;
3. வெளிநாட்டில் வாழும் தகுதி பெற்ற அனைத்து மலேசியர்களுக்கும் வெளிநாட்டு வாக்களிக்கும் முறையை விரிவுபடுத்துதல்;
4. மாவட்டத்திற்கு வெளியிலான வாக்களிப்பை அனுமதித்தல்;
5. முகவரி மாற்றத்துடன் சத்தியப் பிரமாண ஆவணம் தேவைப்படுதல்;
6. தேர்தல் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப்படுதல்;
7. தேர்தல் வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் பரிசோதிப்பதற்கும் ஆட்சேபனை தெரிவிப்பதற்குமான கால அவகாசத்தை நீட்டித்தல்;
8. வாக்குச் சீட்டிலிருந்து தொடர் எண்களை அகற்றுதல் மற்றும் வாக்காளர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுவதை உறுதி செய்தல்;
9. நியமன நாளன்று ஆட்சேபம் தெரிவித்தல் அகற்றப்படுதல் மற்றும் வேட்பாளர்கள் வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை அகற்றுதல்; மற்றும்
10. தேர்தல் ஆணையத்தின் சுயேட்சைத்தன்மையை உறுதி செய்வதற்காக அதனை வலுப்படுத்தல்.