உதவிப் பதிவதிகாரி மீது 15 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

நில, சுரங்க அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பதிவதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 15 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

35 வயதான முகமட் இர்வான் அட்னான் என்ற அந்த உதவிப் பதிவதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

கோலாலம்பூரில் உள்ள கூட்டரசு இல்லத்தில் அமைத்துள்ள அந்த அலுவலகத்தில் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதிக்கும் மார்ச் 30ம் தேதிக்கும் இடையில் அவர் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.

அரசு தரப்பில் டிபிபி-க்களான சையட் பைசால் சையட் அமிரும் ஹமிடி முகமட் நோவும் ஆஜரானார்கள். ஒரு நபர் உத்தரவாதத்துடன் 100,000 ரிங்கிட் ஜாமீனை அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு காப்பாற்றுவதற்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருப்பதால் குறைந்த தொகையை விதிக்குமாறு முகமட் இர்வானுடைய வழக்குரைஞர் சம்சுல் சுலைமான் வலியுறுத்தினார்.

நீதிபதி சே சுல்கிப்லி ஜுசோ ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20,000 ரிங்கிட் ஜாமீனை அனுமதித்தார். அத்துடன் அந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.

-பெர்னாமா