கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் விற்கப்படும் பல பொருட்களில் பிரச்னைகள் இருப்பதை சுகாதார அமைச்சு அதிகாரிகள் இன்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் அளித்த வாக்குறுதிக்கு மாறாக அது அமைந்துள்ளது.
ஒரே மலேசியா கிளிஞ்சல் ( oyster ) சாற்றில் மட்டும் குறைவான புரதச் சத்து உள்ளதைத் தவிர அந்தக் கடைகளில் விற்கப்படும் பொருட்களில் வேறு எதுவும் தவறுகள் இல்லை என அண்மையில் லியாவ் கூறியிருந்தார்.
“அமைச்சர் லியாவ் கிளிஞ்சல் சாறு மட்டுமே பிரச்னை என்றும் மற்றவை நன்றாக இருப்பதாகக் கூறினார்.”
“நாங்கள் அது தவறு என மெய்பித்துள்ளோம்,” என டிஏபி-யின் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறினார். புத்ராஜெயாவில் இன்று சுகாதார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்த டிவிட்டரில் அனுப்பியுள்ள செய்தியில் அவர் அந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் விற்கப்படும் பொருட்கள் குறித்த தங்களது புகார்களை விவாதிப்பதற்காக புவாவும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வாரும் சுகாதார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்தனர்.
அந்தக் கூட்டத்தில் லியாவ் கலந்து கொள்ளவில்லை
மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் இயக்கும் கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் தரம் குறைந்த பொருட்கள் விற்கப்படுவதாக புவாவும் நுருல் இஸ்ஸாவும் தெரிவித்த புகார்கள் மீது விவாதிக்க அமைச்சு அதிகாரிகளை அவர்கள் நேரடியாகச் சந்திக்க வேண்டும் என லியாவ் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டம் நிகழ்ந்தது.
அந்தச் சந்திப்பின் போது அந்தக் கடைகளில் விற்கப்படும் ஒரே மலேசியா பொருட்களில் காணப்படும் பிரச்னைகளை பட்டியலிட்டதாக புவா கூறினார். அதனை சுகாதார அமைச்சு அதிகாரிகள் ஒப்புக் கொண்டதாகவும் அவர் டிவிட்டரில் தெரிவித்தார்.
பிரச்னைகளில் தவறான சிட்டைகள், அதிகமான சீனி அளவு ஆகியவையும் அடங்கும்.
அமைச்சு அதிகாரிகள் ஒப்புக் கொண்ட பிரச்னைகள் என புவா கூறியவற்றில் இவையும் அடங்கும்:
குளிர்பதனம் செய்யப்பட்ட இனிப்பு ரொட்டி, ஐஸ்கிரீம் என தவறாக சிட்டை குத்தப்பட்டுள்ளது. அது இன்னும் அவ்வாறே விற்கப்படுகிறது. அந்தப் பொருளை குளிர் பதனம் செய்யப்பட்ட இனிப்பு ரொட்டி என மறு பெயரிடுமாறு அமைச்சு அந்தக் கடைகளுக்கு ஆணையிட்டுள்ளது.
ஒரே மலேசியா மாதிரி கெட்டிப் பாலில் சீனி அளவு கூடின பட்ச 76 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளதை அமைச்சின் சோதனைகள் உறுதி செய்துள்ளன.
155 கிராம் எடை கொண்ட சார்டின் டின்களை சோதித்த போது ஐந்து டின்களில் மூன்று தேவையான 55 விழுக்காடு நிகர மீன் எடையைக் கொண்டிருக்கவில்லை.
டின்களில் அடைக்கப்பட்ட கோழி இறைச்சிக்கு போதுமான அளவு சிட்டை ஒட்டப்படவில்லை. அது உணவு விதிமுறைகளின் 147வது 151வது பிரிவுகளுக்கு இணங்க இல்லை.
அதிகம் விளம்பரம் செய்யப்படும் ஒரே மலேசியா முயற்சியின் கீழ் மக்களுக்கு விற்கப்படும் மலிவான பொருட்களின் தரம் மீது நுருல் இஸ்ஸா உட்பட பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் நடத்தும் போராட்டத்துக்கு புவா தலைமை தாங்குகின்றார்.