சர்ச்சைக்குரிய பாதுகாப்புக் குற்றச் சட்டம்(சிறப்பு நடவடிக்கைகள்) 2012 (சோஸ்மா) அகற்றப்படாது அதற்குப் பதிலாக திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பது உரிமைக்காகப் போராடும் வழக்குரைஞர் அமைப்புக்குக் கவலை அளிக்கிறது.
அதன் இயக்குனர் மெலிஸ்ஸா சசிதரன், கடந்த காலத்தில் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்கட்சியினரையும் ஒடுக்க சோஸ்மா எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை அரசாங்கம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“அடக்குமுறைச் சட்டங்கள், பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக நியாயமான சட்டங்களாக, ஏற்றுக்கொள்ளத்தக்கச் சட்டங்களாக மாறிவிடமாட்டா”, என்று மெலிஸ்ஸா ஓர் அறிக்கையில் கூறினார்.
குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு நியாயமான விசாரணை கிடைக்க வேண்டும். சோஸ்மாவில் அதற்கு இடமில்லை என்றாரவர்.
“வழக்கமான குற்றவியல் வழக்குகளில் அனுமதிக்கப்படாத சாட்சியங்கள், கொடுமைப்படுத்தியும் சித்திரவதை செய்தும் பெறப்பட்ட சாட்சியங்கள், பொய்யாக திரித்துக் கூறப்படும் ஆதாரங்கள் சோஸ்மா வழக்குகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதுண்டு”, என்றார்.
சோஸ்மா சட்டத்தையும் அதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களையும் அரசாங்கம் விரைவாக அகற்ற வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.