அரசமைப்பு சட்டநிபுணர் அப்துல் அசீஸ் பாரி, அடுத்த ஆண்டு யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏ) விலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தக் கல்விக்கழகத்திலிருந்து கொண்டு சுதந்திரமாகக் கருத்து சொல்வதற்கு இடமில்லை என்பதால் அவர் விலகிச் செல்வதாக நம்பத்தக்க வட்டாரமொன்று தெரிவித்தது.
அவர் சுதந்திரமாகக் கருத்துரைக்க அவருக்குள்ள உரிமை பலமுறை மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கோலேஜ் இஸ்லாம் அந்தாராபங்சா சிலாங்கூரில்(குயிஸ்) அப்படியொரு நிகழ்வு நடந்தது.
சிலாங்கூர் சமய மன்றம், சிலாங்கூர் சுல்தானின் அதிகாரத்துக்குட்பட்ட குயிஸில் அவர் உரையாற்றுவதைத் தடுத்தது.
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய(டியுஎம்சி) விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தான் தலையிட்டது குறித்து அசீஸ் கருத்துரைக்கப்போக அன்றிலிருந்து அவர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.அதன் தொடர்பில் பல்கலைக்கழகம் அவருக்கு விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியதுடன் அக்டோபர் 20வரை அவரை இடைநீக்கமும் செய்தது.
பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இடைநீக்கம் ரத்துச் செய்யப்பட்டது.
22 ஆண்டுகளாக யுஐஏ-யில் விரிவுரையாளராக இருந்து வரும் அசீசால், விரிவுரையில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு பொதுவிவகாரங்கள்மீது கருத்துரைக்காமல் இருப்பதென்பது முடியாத செயல் என்று அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
இடைநீக்க நிகழ்வு, தன் நிலையை விளக்கி பல்கலைக்கழகத்துக்கு எழுதிய கடிதத்துக்கு இதுவரை மறுமொழி வராமை முதலியவற்றை வைத்து அப்பல்கலைக்கழகத்தில் அவரது எதிர்காலம் குறித்து அவருக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
அசீசைத் தொடர்புகொண்டு அவரது உத்தேச பணிவிலகல் பற்றி வினவியதற்கு அவர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.