விடுத்கலை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் கடந்த மாதம் 8, 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் 12 இந்திய நபர்களை சொஸ்மா என்ற தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது வருத்தமளிக்க கூடிய நிகழ்வு என சாடினார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயக்குமார்.
கடந்த ஒரு வாரக் காலமாகக் கொரியாவில் நடைபெற்ற ஆசிய நீர் மற்றும் இயற்கைவள விவகாரங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை நாடு திரும்பிய சேவியர், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், கடந்த வாரத்தில் நாட்டில் மிக முக்கிய விவகாரங்களாக அனைவராலும் பேசப்பட்ட சொஸ்மா தடுப்பு காவல் கைது குறித்துக் கருத்து தெரிவித்தார்.
சொஸ்மா சட்டம் மட்டுமின்றி மேலும் பல சட்டங்களுக்குத் திருத்தம் கொண்டுவரும் கொள்கையில் பக்காத்தான் ஹராப்பான் அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அந்தச் சட்ட நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கான பரிந்துரைகளை விரைவுபடுத்த வேண்டிச் சட்டத்துறை பணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர் படுத்திச் சொஸ்மா தடுப்பு காவலில் உள்ளவர்கள் நிலை குறித்து அவர் கூறும் பொழுது, அது நாம் அனைவருக்கும் வருத்தம் அளிக்கும் விவகாரம் என்றாலும், நடப்பில் உள்ள சட்டவிதி கூறுகளின் அடிப்படையில் போலீசார் செயல்படும் பொழுது அவர்களைத் தடுப்பதோ, அல்லது ஒரு சாராருக்குச் சலுகை காட்டும் விதமாக அமைச்சரவை ஆணையிடுவதோ, செயல்படுவதோ தவறு, அப்படிச் செய்யவும் முடியாது. அப்படிப்பட்ட செயல்கள் நாட்டில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்றார் அவர்.
மக்களின் நலனைப் பாதுகாக்கவே எல்லா நாடுகளிலும் சட்டங்கள் இயற்றப் படுகின்றன. இச்சட்டம் முன்னால் அரசாங்கத்தால் இயற்றப் பட்டிருந்தாலும், நாம் அச்சட்டத்தின் நீக்கம் மீது தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தாலும், இன்றைய அரசாங்கம் நினைத்தபடி மீட்டு கொள்ள முடியாது.
பெரும்பாலான மக்களின் நலனையும் நல்வாழ்வையும் பாதுகாக்கும் கடப்பாட்டுடன் இந்த அரசாங்கம் செயல்படுவது மிக அவசியம். அதனால் அதற்கான பணிகளை முறையாக மேற்கொள்ளச் சட்டத்துறை கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது என்றார் அவர்.
இதற்கு முன் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரிலும், சில வழிபாட்டு மையங்களையும், மற்றும் சில அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல் பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலரைப் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர் படுத்திச் சொஸ்மா தடுப்பு காவலில் உள்ளவர்களின் விடுதலைக்கு அமைச்சரவை அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை வழங்கினால், இன்னொரு பிரிவினர் இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் விடுதலைக்கு நெருக்குதல் தர தயாராக உள்ளனர்.
மேலும் விடுதலைப் புலி இயக்கத்துடன் தொடர்பு படுத்திக் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் பக்காத்தான் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகும். அதனால், அவர்களின் விடுதலைக்கு அமைச்சரவை உத்தரவிட்டால், அமைச்சரவை எடுக்கும் எல்லா முடிவும் பாரபட்சமானது, அநீதியானது என்று மக்கள் கேள்வி எழுப்ப, சந்தேகப் பட, வியாக்கியானம் செய்ய இடமளித்து விடும்.
ஆகையால், விடுதலைப் புலிகளுடன் தொடர் படுத்திச் சொஸ்மா சட்டத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களின் விடுதலைக்குச் சட்ட ரீதியாக நீதி மன்றங்கள் அணுகப் படுகிறது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.