பயங்கரவாத அமைப்புகள், சித்தாந்தங்களின் பட்டியலை போலீஸ் வெளியிட வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது
ஏமாற்றுவேலையை எதிர்ப்பவன்: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெளிப்படைத்தன்மை தேவை எதிர்ப்பாளி: ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போர் முடிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன இப்போதுதான் சிலர் மலேசியத் தமிழர்களுக்கு அப்போருடனும் தமிழீழ விடுதலைப் புலி (எல்டிடிஇ) இயக்கத்துடனும் தொடர்பு இருந்தது என்று குற்றஞ்சாட்டுவது நம்பும்படியாக இல்லை.
அப்படிக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஸ்ரீலங்கா தமிழர் ஒருவர்கூட இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.
மலேசியன்: பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் கேட்டுக்கொண்டுள்ளார், “சோஸ்மாவில் உள்ள பல சட்டவிதிகள் மனித உரிமைக் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்” என்று.
பிகேஆரும் பக்கத்தான் ஹரப்பானும்தானே ஆட்சியில் இருக்கின்றன. அப்படி இருக்க, ஃபாஹ்மி இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது.
ஃபாஹ்மி அவரது கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி இவ்விவகாரத்தை மேலிடத்துக்கு அல்லது அமைச்சரவைக்குக் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டிருக்கலாமே.
ஃபாஹ்மி சோஸ்மா சட்டம் “மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதிப்படுத்த அதில் திருத்தம் வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்கூட கொண்டு வரலாம்.
ஹரப்பான் அரசாங்கம் அமைந்து ஈராண்டு ஆகப் போகும் நிலையில் சோஸ்மாவைத் தூக்கி எறிவதில் ஏன் தாமதம்?
சாமானியன்: 2001-க்குமுன் இன்னொரு நாட்டில் நடக்கும் கிளர்ச்சியை ஆதரிப்பது மலேசியாவில் குற்றமாகக் கருதப்பட்டதில்லை.
அப்போது பல நாடுகளில் அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சில நாடுகளில் இப்போதும்கூட.
பயங்கரவாதச் செயல்கள், பயங்கரவாதத்தை ஆதரிப்பது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130, போதுமான அளவு விவாதிக்கப்படாமலேயே திருத்தப்பட்டது.
நியாயமான மலேசியன்: எப்போது எல்டிடிஇ ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டது என்பது தெளிவாக இல்லை.
மலேசியாவில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று ஃபாஹ்மி கூறுவதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனாலும், எந்த அடிப்படையில் எல்டிடிஇ ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது? அதுவும் அது செயலற்றுப் போய் நீண்டகாலம் ஆன பிறகா அப்படி அறிவிப்பது?
மற்ற அமைப்புகளைப் போல் எல்டிடிஇ ஸ்ரீலங்காவுக்கு வெளியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுப்பட்டது இல்லை.
அதன் போராட்டம் எல்லாம் நீண்ட காலமாக தமிழர்களைக் கொடுமை செய்தும் கொலை செய்தும் பெண்களிடம் பாலியல் கொடுமைகளும் செய்து வந்துள்ள ஸ்ரீலங்கா சிங்களப் பெரும்பான்மை அரசை எதிர்த்துத்தான்.
இப்போது ஸ்ரீலங்கா அந்நாட்டில் விடுதலைப் புலி இயக்கம் இல்லை என்று அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து புலிகளின் பெயரை நீக்கியுள்ளது.
நம் நாட்டில் எல்டிடிஇ இன்னும் பயங்கரவாதப் பட்டியலில் உள்ளது. ஆனால், ஹமாஸ் இல்லை என்பது வியப்பளிக்கிறது. ஹமாஸ் வரலாறு இரத்தக்கறை படிந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பரிவு காட்டுவது அவர்களை ஆதரிப்பதாக தப்பாகக் கருதப்படலாம். அப்படி என்றால் தமிழர்கள்பால் பரிவு காட்டுவது என்றால் என்ன எல்டிடிஇ
ஆதரவு என்பது என்னவென்று தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட வேண்டும்.
பெயரிலி 1552474309: எந்தெந்த அமைப்புகளை ஆதரிக்கக் கூடாது என்பதை போலீஸ் தெள்ளத் தெளிவாக உரைத்திட வேண்டும்.
டேங்கோ: அதிகாரிகள் “பயங்கரவாதிகள்” என்று கருதும் எந்த அமைப்பையும் ஆதரிக்கக் கூடாது.
“சர்வாதிகாரத்துக்கு” எதிராக “ஜனநாயகத்தை”க் காப்பது என்பதை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
உணர்வுகள் வேறு நியாயம் என்பது வேறு.
மலேசியா நேசன்: பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அவை ஏன் பயங்கரவாத அமைப்புகளாக வரையறுக்கப்பட்டுள்ளன என்பதும் தெளிவாக விளக்கப்பட வேண்டும்.
துருக்கி குர்டிஷ் போராளிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளது. அந்தப் போராளிகளோ அமெரிக்கப் படைகளுடன் இணைந்து ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வந்தவர்கள்.
இந்த விவகாரத்திலும் இதுபோன்ற மற்ற விவகாரங்களிலும் நமது நிலைப்பாடு என்ன?