லாரி சாலைத் தடுப்பில் மோதி இரு போலீஸ் அதிகாரிகள் மரணம்

இன்று காலை ஜோகூரில், ஸ்ரீஆலாம், பாசிர் பூத்தே, ஜாலான் சங்கோங்கில் போக்குவரத்துச் சோதனைக்காக போலீசார் அமைத்திருந்த சாலைத் தடுப்பில் லாரி ஒன்ரு மோதியதில் போலீஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் மூவர் காயமடைந்தார்.

பாசிர் கூடாங் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சைபுல்லா முகம்மட், 32, தாமான் சைண்டெக்ஸ் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த முகம்மட் ஜோகார் ரோஸ்லி,32, ஆகிய இருவரும் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர் என ஸ்ரீஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரெண்டண்ட் இஸ்மாயில் டோலா கூறினார்.

“அதிகாலை 5.30க்கு நிகழ்ந்த அவ்விபத்தில் அதிகாரிகள் சாலைப் போக்குவரத்துச் சோதனையை முடித்துக்கொண்டு தளவாடங்களை போலீஸ் லேண்ட் ரோவரில் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் கோட்டா மசாயிலிருந்து தாமான் பாசிர் பூத்தே நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி அவர்கள்மீது மோதியது.

“தொடக்க விசாரணையில் லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் லேண்ட் ரோவர்மீதும் சாலை ஓரமாக நின்றிருந்த ஐந்து போலீஸ்காரர்கள்மீதும் மோதியதாகத் தெரிகிறது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்