ஜோ லோ-வுக்காக போருக்குச் செல்லலாம், ஆனால் வெற்றி கிடைக்காது -மகாதிர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசியச் சட்டத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் ஜோ லோவைப் பிடித்துவர கமுக்கமான ஏற்பாடுகளைச் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றார். அதிகாரிகளுக்கு ஜோ லோ இருக்கும் இடம் தெரிந்தால் ‘மொசாட் (இஸ்ரேலிய உளவுத் துறை) உத்திகளை’க் கையாண்டு அவரைப் பிடித்து வரலாமே என்று வலைப்பதிவர் ஏ.காடிர் ஜாசின் தெரிவித்துள்ளது குறித்துக் கருத்துரைத்தபோது மகாதிர் அவ்வாறு கூறினார்.

தேசிய கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய கழகம் வழங்கிய கெளரவ பட்டமொன்றைப் பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகாதிரிடம் முன்னாள் நாஜி அதிகாரி ஒருவரை அர்ஜெண்டினாவிலிருந்து கடத்திச் செல்ல இஸ்ரேல் உளவுத் துறை கையாண்ட முறைகளை அரசாங்கம் கடைப்பிடிக்குமா என்று வினவப்பட்டது.

“அதற்காக சண்டைக்குப் போகலாம். ஆனால், வெற்றி கிடைக்காது, லோ-வும் கிடைக்க மாட்டார்”, என்றார்.

லோ கிழக்கத்திய நாட்டில் உள்ளாரா மேற்கில் உள்ளாரா என்பது தமக்குத் தெரியாது என்றாரவர்.

ஜோ லோவைப் பிடிப்பதற்கு அரசாங்கம் பெரும் முயற்சி செய்யப்படுகிறது என்று கூறிய பிரதமர் அவரைப் பற்றித் தகவல் கிடைப்பதுதான் சிரமமாக உள்ளது என்றார்.

“அவர் பல கடப்பிதழ்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முகத் தோற்றத்தைக்கூட மாற்றிக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள்.

“எல்லாம் ஊகங்கள்தாம். என்னிடம் ஆதாரங்கள் இல்லை- ஆனால், அப்படியும் இருக்கலாம். இருந்தால் நமக்குத்தான் சிரமம்”, என்று மகாதிர் குறிப்பிட்டார்.