தேர்தல்களில் அழியா மையைப் பயன்படுத்த ஃபாட்வா மன்றத்தின் ஒப்புதல் தேவை என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது சரியல்ல என்கிறார் வலைப்பதிவர் ஒருவர். அதன்மீது மன்றம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாம்.
மை பயன்படுத்தப்படுவதைத் தாமதப்படுத்தவே இசி அப்படிக் கூறுகிறது என்று குறிப்பிட்டுள்ள துலாங் பீசி என்னும் வலைப்பதிவர் அழியா மைக்கு 2007-இலேயே ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.
இணையத்தளத்தைத் தேடிப்பார்த்ததில், தேசிய ஃபாட்வா மன்றம் 2007 ஆகஸ்ட் 8-இல் நடைபெற்ற ஒரு சிறப்பு மாநாட்டில் அழியா மையைப் பற்றி விவாதித்ததாகத் தெரிய வருகிறது.
“மன்றம் அதன் உறுப்பினர்களும் வேதியியல் வல்லுனர்களும் வழங்கிய சான்றுகளை ஆராய்ந்து இஸ்லாமிய சட்டத்துக்குப் புறம்பான பொருள்கள் அந்த மையில் இல்லை என்றும் அது உடல்நலனுக்குக் கெடுதல் செய்வது இல்லை என்றும் அது தண்ணீர் தோலில் படுவதைத் தடுப்பதில்லை என்றும் முடிவு செய்தது.
“எனவே, அழியா மையைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. அது முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு இடையூறு செய்வதில்லை”, என்று ஃபாட்வா மன்றம் தீர்மானித்தது.
அப்துல்லா அஹமட் படாவி பிரதமராக இருந்த காலத்தில் அழியா மையைப் பயன்படுத்தும் விவகாரம் விவாதிக்கப்பட்டபோது ஃபாட்வா மன்றம் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தது. ஆனால், பின்னர் அந்த மையைப் பயன்படுத்தும் எண்ணம் கைவிடப்பட்டது.
இதற்குமுன் இசி, அழியா மையைப் பயன்படுத்த அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றது.
ஆனால், சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அது தேவையில்லை என்றும் இசி தேர்தல் விதிகளில் மாற்றம் செய்தால் போதுமானது என்றும் தெரிவித்தார்.
தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி), தயாரித்துள்ள பூர்வாங்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளில் அழியா மையைப் பயன்படுத்தலாம் என்பதும் ஒன்றாகும் . அப்பரிந்துரையை உடனே செயல்படுத்தலாம் என்றும் அது கூறியுள்ளது.