நேற்றிரவு எம்பிகளும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுவதை அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் மறுத்தார்.
“நான் நேற்றிரவு (எதிரணி எம்பிகளை அழைத்துக்கொண்டு) அஸ்மினைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுவது உண்மையல்ல. அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது நானல்ல.
“அம்னோ ஒழுங்கு நடவடிக்கைக் குழு என்னை விசாரிக்க முடிவு செய்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். மறைப்பதற்கு ஒன்றுமில்லை”, என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அஸ்மினுடனான சந்திப்புக்குப் பின்னே உள்ள சூத்திரதாரி என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம் தன்னைக் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது ஹிஷாமுடின் அவ்வாறு கூறினார்.
நேற்றிரவு 22 பிஎன் எம்பிகளும் பிகேஆர் எம்பிகள் ஐவரும் புத்ரா ஜெயாவில் உள்ள அஸ்மின் வீட்டுக்கு இரவு விருந்துக்குச் சென்றதாகத் தெரிகிறது.