கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் அதிக எண்ணிக்கையிலான எச்ஐவி/ஏய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்டுள்ள மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது. அந்தப் புள்ளிவிவரம் பாஸ் தலைமையிலான கிளந்தான் மாநில அரசாங்கம் பின்பற்றுகிற சமூக நல நாடு என்னும் கோட்பாட்டைக் கீழறுப்புச் செய்வதாக அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ள கிளந்தான் பேராளர் ஒருவர் கூறுகிறார்.
பாஸ் கட்சி, இஸ்லாமிய நாடு என்னும் கோட்பாட்டிலிருந்து சமூக நல நாடு என்னும் கோட்பாட்டுக்கு மாறி விட்டதாக ரந்தாவ் பாஞ்சாங் தொகுதியைச் சேர்ந்த முகமட் அபாண்டி யூசோப் என்ற அந்தப் பேராளர் சொன்னார்.
இந்த உலகிலும் அதற்குப் பின்னரும் ஒரு நபர் பாதுகாப்பாக இருப்பதே சமூக நல நாடு என்பதற்கான அர்த்தம் என அவர், கோலாலம்பூரில் புத்ரா உலக வாணிக மய்யத்தில் நிகழும் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூறினார்.
“கடந்த 21 ஆண்டுகளாக கிளந்தான் பாஸ் ஆட்சியில் இருந்து வருவதால் நான் அந்தக் கட்சியின் சமூக நலக் கோட்பாட்டை அறிந்துள்ளேன்.”
“தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக கிளந்தானில் இந்த நாட்டில் அதிக எண்ணிக்கையிலான எச்ஐவி/ஏய்ட்ஸ் நோயாளிகள் பாஸ் பெற்றுள்ளது. பாஸ் நிர்வாகம் அந்த நோயைக் கொண்டு வந்துள்ளது. அதன் நிர்வாகத்துக்கு ஆசீர்வாதம் இல்லை,” என்றார் அவர்.
பாஸ் சமூக நல நாட்டுக்குப் போராடும் வேளையில் அங்கு வழங்கப்படும் நீர், மஞ்சள் நிறத்தில் ஒரே கலங்கலாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
21 ஆண்டுகளில் எந்தச் சாதனையும் இல்லை
சமயம், சமூகம், கல்வி தொடர்பான தீர்மானம் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் பேசினார்.
பாஸ் கட்சி போராடும் சமூக நல நாடு என்றால் என்ன என்றும் அவர் வினவினார்.
21 ஆண்டுகளில் பல பிரச்னைகளைத் தீர்க்கவும் அது தவறி விட்டது.
“பல ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க அதற்கு 600 மில்லியன் ரிங்கிட் மானியம் கொடுக்கப்பட்டது.”
“நாடு மகாதீர், அப்துல்லா, நஜிப் ஆகிய மூன்று பிரதமர்களைக் கண்டுள்ளது. ஆனால் தண்ணீர் பிரச்னை இன்னும் தீரவில்லை,” என்றார் அவர்.
“2027க்குள் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து விடுவதாக கிளந்தான் பாஸ் அரசாங்கம் இப்போது வாக்களித்துள்ளது. அந்த மானியம் என்னவானது என்பதை அறிய மக்கள் விரும்புகிறனர். ஏனெனில் அவர்கள் தூய்மையான தண்ணீருக்காக பல ஆண்டுகள் காத்திருக்கின்றனர்.”
மற்ற மாநிலங்களும் அந்த இஸ்லாமியக் கட்சியிடம் வீழ்ச்சி அடைந்தால் கிளந்தானுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் அவற்றுக்கும் ஏற்படும் என அபாண்டி எச்சரித்தார்.
மற்ற இனங்களுடன் இணக்கமாக ஒத்துழைக்கும் கோட்பாட்டை பாஸ் கட்சி மிகவும் தாமதமாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பிஎன் 60 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த யோசனையைப் பின்பற்றத் தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார்.
2008ம் ஆண்டு தொடக்கமே அது டிஏபி-யுடனும் பிகேஆர்-உடனும் ஒத்துழைக்கிறது.
“அது தாமதமாகத் தொடங்கியுள்ளது. நாம் அதனை நம்பலாமா ?” என அவர் கேட்டார்.
கடந்த 21 ஆண்டுகளாக கிளந்தான் மாநிலத்தை ஆளும் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட் இளம் தலைவர்களுக்கு வழி விடுவதற்காக பதவி விலக வேண்டும் என அபாண்டி மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த காலத்தில் டாக்டர் மகாதீர் முகமட், அப்துல்லா அகமட் படாவி ஆகிய முன்னாள் பிரதமர்களை பதவி துறக்குமாறு பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.
“ஏற்கனவே அது பதவி விலகுமாறு மகாதீரையும் அடுத்து பாக் லா-வையும் கேட்டுக் கொண்டது. ஆனால் மிகவும் வயதாகியும் மற்றவர்களுக்கு வழி விட கிளந்தான் மந்திரி புசார் மறுக்கிறார்.”
மற்றவர்களுக்கு குறிப்பாக அம்னோவுக்கு பாஸ் ஆன்மீகத் தலைவர் வழி விடுவதற்கு நேரம் வந்து விட்டதாகவும் அபாண்டி குறிப்பிட்டார்.
“எந்த நேரத்திலும் கிளந்தானை மீண்டும் கைப்பற்றி அதற்குத் தலைமை தாங்க அம்னோவும் பிஎன்-னும் தயாராக இருக்கின்றன,” என்றார் அவர்.