சிவா லெனின் | கடந்த 23 ஆண்டுகளாக, ஜொகூர் மாநிலத்தின் தென்பகுதியில், மனித உரிமை மற்றும் அரசியல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து வரும் செம்பருத்தி தோழர்கள் இயக்கம், அதன் 23-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, ‘செம்பருத்தி நட்புறவு விருந்து’ நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது.
மக்களாட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கருவாக கொண்டு, மக்கள் மத்தியில் நன்மதிப்போடும் தனித்துவமாகவும் செயலாற்றி வரும் இவ்வியக்கத்தின் பணியானது காலத்தால் மதிக்கப்படும் ஒன்றாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பக்காலங்களில், சமூகநலன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பின் தங்கிய ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு திட்டங்களில் கவனம் செலுத்திய இவ்வியக்கம், பின்னர் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்னைகள் முதற்கொண்டு அவர்களின் வாழ்வாதார உரிமை வரை அதன் போராட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
பேதங்கள் ஏதுமின்றி, ஒன்றுபட்டு செயல்படுவதை வலியுறுத்தும் நோக்கத்தில், நாட்டின் தேசிய மலரான, மிகவும் பிரகாசமான செம்பருத்தி மலரை இயக்கத்தின் சின்னமாக கொண்டு இயங்கி வரும் இவர்கள், வீடற்றவர் பிரச்சனை, குடியுரிமை பிரச்சனை, தொழிலாளர் உரிமை, குறைந்தபட்ச ஊதியம், தமிழ்ப்பள்ளி பிரச்சனைகள், சமூகநலன் சிக்கல்கள் உட்பட அடிப்படை மனித உரிமையைக் காக்கவும் தொடர்ந்து போராடிவருவது அவர்களின் தனித்துவ சிறப்பாகும்.
அதேவேளையில், நம் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் நல்வாழ்விற்காகவும் இவர்களின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நம் நாட்டில் அதிகரித்து வந்த அகதிகள் எதிர்நோக்கும் சிக்கல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர்கள், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் யாவும் கிடைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பது, போரில் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கு நிதி திரட்டி கொடுப்பது போன்ற பணிகளில் மும்மரமாக இறங்கி செயல்பட்டனர்.
மேலும், 2004 சுனாமி பேரிடரின் போது, இவர்கள் ஆற்றியப் பணி அளப்பரியது. சுமார் 1 மாத காலம், சுனாமி பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஸ்கூடாயில் நிவாரண மையம் அமைத்து, செயல்பட்டு, நிதி மற்றும் பொருள்கள் திரட்டி, இலங்கை மற்றும் இந்தோனேசியா, ஆச்சேவுக்கு அனுப்பிவைத்தனர். மனிதாபிமான உதவிகளிலும் இவர்களின் பங்களிப்பானது ஆக்கப்பூர்வமானதாகவே அமைந்துள்ளது எனலாம்.
தொடர்ந்து நாட்டில் நடந்த மக்கள் உரிமைக்கான வீதி போரட்டங்கள், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான பேரணி மற்றும் அரசியல் மாற்றத்திற்கான களப்போராட்டங்களிலும் மாற்று அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராடினார்கள்.
பெர்சே இயக்கத்துடன் இணைந்து ‘தூய்மை மற்றும் நியாயமான’ தேர்தலுக்கான பிரச்சாரப் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஜொகூர் மாநில அளவில் நடந்த பெர்சே பேரணியின் போது, ஏற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்து செயல்பட்டனர். பெர்சே போராட்ட வரலாற்றில், மலேசிய இந்தியர்களின் பங்கும் இருந்ததற்கான ஆதாரமாக, அனைத்து கையேடுகள், பதாகைகள், அறிக்கைகளையும் தமிழிலும் இடம்பெறச் செய்த பெரும்பங்கு செம்பருத்தி தோழர்களைச் சாரும் என்பது இங்கு பெருமிதமாக பதிவு செய்ய வேண்டிய விடயமாகிறது.
அதுமட்டுமின்றி, மலேசிய சோசலிசக் கட்சியுடன் (பி்எஸ்எம்) இணைந்து தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம், சேமநிதி, பெர்கேசோ மற்றும் வேலையிழப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், நகர முன்னோடிகள் எதிர் நோக்கும் வீட்டுடமை பிரச்சனை மற்றும் பள்ளிகளுக்கான மாற்று நிலப் பிரச்சனைகளிலும் இவர்களின் போராட்டம் தொடர்ந்து, அதன் அடுத்தக்கட்ட நகர்வினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் நோக்கத்துடன் தடுத்து வைக்கப்படும் நபர்களை, குறிப்பாக மக்கள் செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்களை விடுவிப்பதற்காக முன் நின்று போராடிய வரலாறும், இவர்களின் பெயரை குறிப்பிடும். அதேவேளையில், உலகின் சில பகுதிகளில் நடந்த அல்லது நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலைகளுக்கு எதிராக, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், மே 18-ம் நாள், ஜொகூர்பாரு மாநகரில், மெழுகுவர்த்தி ஏந்தல் விழிப்பு நிலை போராட்டத்தையும் கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், இவ்வியக்கத்தின் அனைத்து நகர்வுகளையும் போராட்ட செயல்பாடுகளையும் ஜனநாயக அரசியல் வழியில் முன்னெடுக்க முயற்சிப்பதாக செம்பருத்தி தோழர்கள் ஒருங்கிணைப்பாளர் சாந்தலட்சுமி பெருமாள் கூறினார். எங்களின் போராட்டங்கள் மக்களுக்கானது, அவர்களின் விழிப்புணர்வுக்கும் உரிமைக்குமானது எனவும் அழுத்தமாக பதிவு செய்தார்.
மேலும், “மக்கள் இயக்கம் தான் அரசியல், நாட்டின் வளங்கள் தான் அரசாங்கம், அதை நேர்மையாக வழி நடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தான் அரசியல்வாதிகள். அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, புத்தாக்க சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும். மாற்றத்திற்கான அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்ற ஜனநாயக முதிர்ச்சி மக்களிடையே மேலோங்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
எனவே, செம்பருத்தி தோழர்கள் இயக்கத்தின் 23-ம் ஆண்டு நிறைவையொட்டி, எதிர்வரும் 23.11.2019 (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு, கங்கார் பூலாய் சன் சன் கோக் வாங் (San San Kok Wang, Kangkar Pulai, Johor Bahru) மண்டபத்தில் ‘செம்பருத்தி நட்புறவு விருந்து’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் நோக்கம் மட்டுமின்றி, இவர்கள் கடந்து வந்த போராட்டக் களத்தில் துணை நின்றவர்களையும் பங்களிப்பு செய்தவர்களையும் நினைவு கூறும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாகவும் இது இருக்கும் என்று சாந்தா நம்பிக்கை தெரிவித்தார்.
எனவே, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை சிந்தனையாளர்கள் யாவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பதோடு, ஆதரவும் நல்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு நுழைவு சீட்டு விற்பனையில் உள்ளது. இவர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்க விரும்பும் நல் உள்ளங்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம் எனவும் சாந்தா பெருமாள் கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு :- பெ.சாந்தா 013 758 6881 சா.திருமாறன் 018 988 4250 மு.வீரமா 018 977 4304