அமைச்சரவை மாற்றம் குறித்து அச்சம் கொள்கிறாரா, குவான் எங்?

நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிடம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மற்றம் குறித்து ஒரு கேள்வி கேட்டதற்குப் பதிலளிக்க மறுத்தார்.

இன்று கோலாலும்பூரில், செய்தியாளர் கூட்டமொன்றில் அவரிடம் அது தொடர்பான கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. அவர் அதற்குப் பதிலளிக்காமல் “அடுத்த கேள்விக்குப் போகலாமா?”, என்றார்.

அதற்கு முன்னதாக லிம், இன்று காலை செய்தித்தாள்களைப் பார்த்துத்தான் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையில் மாற்றம் செய்யத் திட்டமிடும் செய்தியைத் தெரிந்து கொண்டதாகக் கூறினார்.

டிஏபி அமைச்சரவை மாற்றம் பற்றி விவாதித்ததா என்று வினவியதற்கு லிம் அவ்வாறு பதிலிறுத்தார்.

நிதி அமைச்சர் பதவி வகிக்கும் இரண்டாவது மலேசியச் சீனர் லிம். அவருக்குமுன் மசீச முன்னாள் தலைவர் டான் சியு சின் 1959-இலிருந்து 1974வரை நிதி அமைச்சராக இருந்தார்.

லிம் நிதி அமைச்சராக இருந்தாலும் அவர் அதிகாரமற்ற ஒரு பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதாகத்தான் குறைகூறப்படுகிறது. அதிகாரமெல்லாம் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி-இன் கைகளில் இருக்கிறதாம்.

மசீச தலைவர் வீ கா சியோங், கணக்குப் புத்தகங்களைப் பார்த்துக்கொள்லும் வெறும் கணக்குப்பிள்ளைதான் லிம் என்று கேலி செய்துள்ளார்.