சிங்கப்பூரில் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற கொடூர முறைகள் கையாளப்படுகின்றன- எல்எப்எல் குற்றச்சாட்டு

சிங்கப்பூர் சிறைத் துறை(எஸ்பிஎஸ்) தூக்குத்தண்டனையை நிறைவேற்றச் சட்டவிரோதமான, கொடூரமான முறைகளைக் கையாளுகிறது என்றும் அதற்கு “மறுக்கவியலாத” ஆதாரங்கள் இருப்பதாகவும் உரிமைகளுக்குப் போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பு (எல்எப்எல்) கூறிக்கொள்கிறது.

ஆதாரங்களை உடனடியாக அது வெளியிடாது. தகவலளித்த வட்டாரத்தைப் பாதுகாக்க வேண்டியுள்ளதாக எல்எப்எல் ஆலோசகர் என்.சுரேந்திரன் கூறினார். அதற்குமுன் அது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் எல்எப்எல் பேச்சு நடத்த விரும்புகிறது.

“சட்டவிரோதமான, கொடூர முறைகளை எஸ்பிஎஸ் பயன்படுத்தப்படுத்துகிறது என்பதற்கு எங்களிடம் மறுக்க முடியாத ஆதாரங்கள் உண்டு. சிறை அதிகாரிகள் கொடுத்த ஆதாரங்கள் அவை. உரிய நேரத்தில் அவை வெளியிடப்படும்”, என்று சுரேந்திரன் ஓர் அறிக்கையில் கூறினார்.

மலேசியாகினி தொடர்புகொண்டபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேந்திரன், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் “நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள” சிறை அதிகாரிகளின் சாட்சியங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அவை என்றார்.

“அவை தூக்குத்தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை விவரிக்கின்றன. தகவலளித்தவர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது (அதனால் ஆதாரங்களை உடனடியாக வெளியிடும் திட்டம் இல்லை)”, என்றார்.

சிங்கப்பூர் (போதைப் பொருள் குற்றங்களுக்கான) தூக்குத் தண்டனையை உடனே நிறுத்தி வைப்பது நல்லது என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டார். சிங்கப்பூர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த எல்எப்எல் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

மலேசியரான அப்டுல் ஹெல்மி 2017-இல் போதைப் பொருள் கடத்தியதற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டிருக்கும் வேளையில் எல்எப்எல் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.