‘சகிப்புத்தன்மை மற்றும் இணக்கமான தேசத்தை உருவாக்குவோம்!’ – பி.எஸ்.எம். கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அன்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளோடு, அனைத்து மலேசியர்களுக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்துகளையும் மலேசிய சோசலிசக் கட்சி தெரிவித்துக்கொண்டது.

நாட்டிற்கும் நம் குழந்தைகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை கட்டியெழுப்ப விரும்பினால், நம் தேசத்தையும் சாதாரண மலேசியர்களின் சிந்தனையையும், கடந்த 60 ஆண்டுகளாக நச்சுப்படுத்தியிருக்கும் இன அரசியலை எதிர்ப்பதற்கு ஒரு சூத்திரத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் இன்று வெளியிட்ட ஒரு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

“ஜாவி எழுத்தை, 3 பக்கங்கள் கற்பித்தல் போன்ற தீங்கற்ற சில பிரச்சினைகள் கூட, இனங்களுக்கு இடையிலான பதட்டங்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு இன்று நிலைமை மோசமடைந்துள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

“சில மலாய்க்காரர் அல்லாதவர்கள் ‘காட்’ திட்டம், சமுதாயத்தை மேலும் ‘இஸ்லாமிய மயமாக்குவதற்கான’ மற்றொரு படியாக கருதி, எதிர்வினையாக செயல்படுகின்றனர். அதனை, பல மலாய்க்காரர்கள், மலாய் மொழியும் கலாச்சாரமும் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொதுவான மலேசிய கலாச்சாரத்தை உருவாக்குவதில், மலாய் அல்லாத குழுக்களின் உறுதிப்பாடு குறித்து கேள்வி எழுப்புகின்றனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்தக் கருத்து வேறுபாடுகள், டோங் ஜோங் தனது பேரணியை நடத்தவிருக்கும் நேரத்தில் இன்னும் கடுமையானதாகிவிடும். இரு தரப்பிலும் உள்ள வர்ணனையாளர்களும் செய்தித் தொடர்பாளர்களும், தங்கள் இனத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில், தாங்கள்தான் சிறந்தவர்கள் என்றும் மிகவும் நம்பகமான பாதுகாவலர்கள் என்றும் தாங்கள் சார்ந்த இனக்குழுவிற்குக் காண்பிப்பார்கள்.

“அவர்களின் இந்தச் செயல்பாடுகள், அடுத்த குழுவினரை மேலும் புண்படுத்தும் விதமாகவே அமையும்,” என டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சூழ்நிலையில், பரவிவரும் நச்சு அரசியலுக்கு ஒரு மருந்தைப் பரிந்துரைக்க பி.எஸ்.எம். விரும்புகிறது – சாதாரண குடிமக்களாகிய நாம், ‘அடுத்தவரின் காலணியில் ஒரு மைல் தூரம் நடந்துதான் பார்ப்போமே’.

“அதாவது, மலாய்க்காரர் அல்லாதவர்கள், மலாய் சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள, சில முயற்சிகளை எடுக்க வேண்டும் – 5 தசாப்தங்களாக பல மானியங்கள் இருந்தபோதிலும், கிராமப்புற வறுமை ஏன் இன்னும் தொடர்கிறது? எஸ்.எம்.இ. துறைகளில் பூமிபுத்ரா பங்கேற்பு ஏன் இன்னும் பலவீனமாக உள்ளது? நமது நகர்ப்புற ஏழைகள் வசிக்கும் குறைந்தக் கட்டண குடியிருப்புகளின் மோசமான நிலைமைகளை நாம் எவ்வாறு சமாளிக்க முடியும்? மலாய் சிவில் சமூகக் குழுக்களுடன் சேர்ந்து, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாம் முயற்சிக்கலாமே,” என அவர் கூறியுள்ளார்.

“அதேபோல, இனங்களுக்கிடையே, உறவுப் பாலம் உருவாக்க விரும்பும் மலாய்க்காரர்கள் – அரசாங்கத் திட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், வயதுகுறைந்தோரை (மைனர்) ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றுவது, அரசாங்க வேலைகளில் மோசமான வாய்ப்பு, மலேசியாவில் பிறந்திருந்தும், பெற்றோரின் கவனக்குறைவால் முறையான ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை மறுக்கப்படுதல் போன்ற சிக்கல்களை எதிர்நோக்கும் மலாய்க்காரர் அல்லாத, குறிப்பாக மலாய்க்காரர் அல்லாத ஏழைகளை வருத்தும் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மலாய் அல்லாத சிவில் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற அவர்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்றும் அவர் மலாய் சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.

மனித நேயங்கொண்ட பொதுவானக் குழுவை உருவாக்க, நாம் இனப்பிளவுகளைக் கடந்து செல்ல வேண்டுமென அவர் மேலும் சொன்னார்.

“இனத்திற்கு இடையிலான பிளவுகளை நாம் கடந்துசெல்ல வேண்டும். இது மட்டுமே நமது நம்பிக்கை, ஒரு பொதுவான மலேசியாவை உருவாக்கும் திறன் இதற்கு மட்டுமே உள்ளது.

இன அரசியல் மற்றும் கொள்கைகள் மற்றும் நியாயமற்றப் பொருளாதாரக் கட்டமைப்புகளால், இனப்பிளவு ஏற்பட்டு, இருதரப்பிலும் ‘காயமடைந்துள்ளதை’ நாம் உணர வேண்டும்.

“அந்தக் காயத்தைக் குணப்படுத்துவதற்கான ஒரே வழி, மற்றவர்களைப் புரிந்துகொள்வதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பங்கெடுப்பதற்கும் நாம் தயாராக வேண்டும்,” என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், “துரதிர்ஷ்டவசமாக தற்போதுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த முயற்சியை முன்னெடுக்க முடியாது, ஏனென்றால் அவை இன்னும் அந்தந்த இனக் குழிகளில் வேரூன்றியுள்ளன. மேலும், அவர்களின் தலைவர்கள், தங்கள் சமூகத்தின் சிறந்த ‘பாதுகாவலர்கள்’ தாங்கள்தான் என்பதை நிரூபிக்கத் தங்களுக்குள் போட்டியிட்டு கொண்டிருக்கிறார்கள்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த ‘மாற்று மருந்தை’ (இனப் பிளவுகளைத் தாண்டி) வழங்க ஒரு பரந்த அடிப்படையிலான, பல்லின சிவில் சமூக இயக்கம் நமக்குத் தேவை. இதுதான் நம் நாடு முன்னோக்கி செல்ல வழி.

“ஆகவே, 2020-ம் ஆண்டிற்கான உங்கள் தீர்மானங்களில் ஒன்றாக – இனப் பிளவுகளைத் தாண்டி – பிற இனத்தவர்களை, அவர்களில் பின்தங்கியவர்களை அறிந்துகொள்வோம் – குணப்படுத்தும் செயல்முறையை இதன்மூலமே தொடங்க முடியும்,” என்ற ஜெயக்குமார், “இதில் நல்ல செய்தி என்னவென்றால், பெரும்பாலான சாதாரண மலேசியர்கள் மிகவும் சகிப்புத்தன்மை உள்ளவர்கள், இணக்கமான ஒரு மலேசியாவைக் காண விரும்புகின்றவர்கள்,” என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.