டொங் சொங் காரணமாக மீண்டும் மே 13 நிகழ இடமளிக்காதீர்: காமிஸ் எச்சரிக்கை

காபோங்கான் மகாசிஸ்வா இஸ்லாம் ச-மலேசியா(காமிஸ்) , சீனக் கல்வி அமைப்பான டொங் சொங்கை அதன் “துரோகச் செயலுக்காக” தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

அச்சங்கத்தின் துணைத் தலைவர் முகம்மட் ஸொப்ரி சுகில்மி ரஸ்லி, “இன நல்லிணக்கத்தை”க் கெடுப்பதே டொங் சொங்கின் வழக்கமாகும் என்றார்.

“சக மலேசியர்களே, கண் திறப்பீர்! வஞ்சமிக்க டிஏபி-யும் அதன் துணை அமைப்பான டொங் சொங்கும் நாட்டை இனப் பிரச்னைகளை நோக்கி இழுத்துச் செல்வதைப் பாரீர்”, என்றவர் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

“டொங் சொங் காரணமாக மே 13 மீண்டும் நிகழ இடமளிக்காதீர்”, என்று கோரிக்கை விடுத்தவர், (நல்லிணக்கத்தைக் கெடுப்பதில்) விடாப்பிடியாக இருந்தால் நாட்டைவிட்டே வெளியேற்றுவோம்”, என்று எச்சரித்தார்.

டிஏபி மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் லிம் கிட் சியாங் காமிஸ் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்திருந்ததே டொங் சொங்குக்கும் டிஏபி-க்கும் தொடர்புண்டு என்பதற்கு ஆதாரமாகும் என்றும் முகம்மட் ஸொப்ரி கூறினார்.