இன, சமய விவகாரங்களே போலீசுக்குப் பெரும் பிரச்னை- ஐஜிபி

இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர், அண்மைக்காலமாக போலீசுக்குப் பெரும் பிரச்னைகளாக இருப்பவை இன, சமய விவகாரங்கள்தான் என்கிறார்.

மக்களுக்குச் சிறப்பான, நியாயமான, வெளிப்படையான சேவை வழங்க போலீஸ் முயலும் வேளையில் இப்படிப்பட்ட எதிர்பாராத, சில்லறை விவகாரங்கள் அதற்கு இடையூறாக அமைந்து விடுகின்றன என்றாரவர்.

“62 ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் நம் சிந்தனை முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

“இன, சமய விவகாரங்களைக் கையிலெடுக்க விரும்புவோருக்குக் கூறிக்கொள்கிறேன் உங்கள் சிந்தனையில் முதிர்ச்சி தேவை.

“நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் எல்லாரும்தான் பாதிக்கப்படுவோம். அதனால் யாருக்கும் நன்மை இல்லை”, என்றாரவர்.

காஜாங்கில் இன்று நடைபெறவிருந்த தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநாட்டுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டதைச் சில தரப்பினர் குறைகூறியது குறித்துக் கருத்துரைத்தபோது ஐஜிபி அவ்வாறு கூறினார்.

“மாநாடு இரத்துச் செய்யப்பட்டு வேறொரு வகையில் மற்றவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடாத வகையில் நடத்தப்படுவதே நல்லது.

“மக்களாட்சிக் கொள்கைகளில் உறுதியாக இருப்பவன் நான். மக்களுக்குக் கருத்துச் சொல்ல சுதந்தரம் உண்டு. ஆனால், கட்டுப்பாடான முறையில் அதைத் தெரிவிக்க வேண்டும்.

“இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் என்ற முறையில் மாநாட்டை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் எனக்குக் கிடையாது. நான் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதில்லை”, என்றாரவர்.

-பெர்னாமா