அம்னோ தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா, ஒழுங்கு நடவடிக்கை வாரிய விவகாரங்களில் கட்சித் தலைமை தலையிடுவதில்லை என்றார்.
ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கட்சி அமைப்புவிதிகளின்படி அமைக்கப்பட்டது. அது தனித்து இயங்குகிறது.
“ஒழுங்கு நடவடிக்கை வாரிய விவகாரங்களில் தலையீடுகள் இருந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை”, என அன்னுவார் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
டிசம்பர் 26-இல் நடக்கவிருந்த செம்ப்ரோங் எம்பி ஹிஷாமுடின் ஹஷிமுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை வாரிய விசாரணை தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து அவ்வாரியத் தலைவர் அபாண்டி அலி தலையீடு நிகழ்ந்திருப்பதாகக் குற்றஞ் சாட்டினார்.
த்லையீட்டைக் காரணம்காட்டி வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் அவர் கூறினார்.
அபாண்டியிடமிருந்து இதுவரை எந்தக் கடிதமும் பெறப்படவில்லை என்று கூறிய அன்னுவார் வெளிநாடு சென்றுள்ள அவர் திரும்பி வந்ததும் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும் என்றார்.
“அபாண்டியுடன் பேசினேன். அவர் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளார். என்னிடம் எல்லாவற்றையும் விளக்கினார். அபாண்டி திரும்பி வந்ததும் எல்லாம் முறைப்படி விவாதிக்கப்படும்.
“அபாண்டி தலைமையில் வாரியக் கூட்டம் நடைபெறும். குழப்பமெல்லாம் தீரும்”, என்றார்,
ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
ஒழுங்கு நடவடிக்கை வாரியம் ஹிஷாமுடினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றது கட்சியில் பூசலை உண்டாக்கியுள்ளது.
அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லொக்மான் ஆடம், ஒழுங்கு நடவடிக்கை வாரிய விசாரணை நடப்பதைக் கட்சித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தடுத்ததாகக் குற்றஞ் சாட்டினார்.
லொக்மான் அக்டோபர் மாதம் ஹிஷாமுடினுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை வாரியத்திடம் புகார் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஷாமுடின், அம்னோ எம்பிகள் பெர்சத்துக் கட்சிக்குத் தாவுவதற்கு உதவியாக அம்னோ எம்பிகளுக்கும் பொருளாதார அமைச்சரும் பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் அலிக்குமிடையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் என்று அவர் புகாரில் கூறியிருந்தார்.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என ஹிஷாமுடின் அதை மறுத்துள்ளார்.