பெட்டாலிங் ஜெயாவில் ஜாவி எழுத்து எதிர்ப்பு மாநாடு

செகாட் எனப்படும் காட் எழுத்துக் கலை நடவடிக்கை குழு ஏற்பாட்டில் இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் தேசிய ஜாவி காங்கிரஸ் நாடு தொடங்கியது.

நேற்று காஜாங்கில் சீனக் கல்வி அமைப்பான டோங் சொங்கும் மற்ற சீன அமைப்புகளும் தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த மாநாடு நீதிமன்ற உத்தரவு மூலமாக தடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அதனை அடுத்து இன்று பெட்டாலிங் ஜெயாவில் இந்த தேசிய ஜாவி காங்கிரஸ் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டுக்கும் எதிர்ப்பு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே எதிர்ப்பாளர்கள் வந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வெளியில் ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களிடம் நயமாக பேசி அவர்களையும் மாநாட்டில் பேச வைக்கப்போவதாகக் கூறினார் செகாட் செயலாளர் அருண் துரைசாமி.

“வெளியில் நின்று கண்டனம் தெரிவிக்கும் அவர்களைக் கண்டிப்பாக மண்டபத்துக்குள்ளே அழைப்பேன், மாநாட்டில் உரையாற்றுமாறு கேட்டுக் கொள்வேன்”, என்றார்.

இந்த ஜாவி காங்கிரசில் தமிழ், சீனப் பள்ளிகளின் 400 பேராளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். மசீச இளைஞர் அணித் தலைவர் சொங் சின் வூன், பூசாட் இக்ராம் நிர்வாகக் குழு உறுப்பினர் சைட் கமருடின், மற்றும் சரவாக் பேராளர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.