மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), அதிகாரிகள் வன்முறை மிரட்டல்களுக்கு விட்டுகொடுப்பதை எண்ணி வருத்தமடைகிறது.
காஜாங் போலீஸ் சீனக் கல்வி அமைப்பான டொங் சொங் ஜாவி விவகாரம் குறித்து விவாதிக்க கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த மாநாடு நடைபெறாமல் தடுக்க நிதிமன்றத் தடை உத்தரவு பெற்றதுதான் சுஹாகாமின் வருத்தத்துக்குக் காரணம்.
மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக மலாய் அமைப்புகள் சில மிரட்டியதால் போலீஸ் அதைத் தடுத்து நிறுத்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து டொங் சொங் ஜாவி காங்கிரஸை இரத்துச் செய்தது. மலாய் அமைப்புகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கைவிட்டன.
ஒரு மாநாட்டை நடத்த டொங் சொங்குக்குள்ள உரிமையை நீதிமன்ற உத்தரவு மூலமாகத் தடுத்து நிறுத்திய போலீசின் செயலை சுஹாகாம் கடுமையாகக் கருதுகிறது.
“மலேசிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல் வன்முறை மிரட்டல்களுக்கு விட்டுக்கொடுக்கும் அதிகாரிகளின் செயல் கவலை அளிக்கிறது”, என சுஹாகாம் நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறியது.
டொங் சொங் காங்கிரஸ், அதற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டுக்குமே அனுமதி அளித்து இரண்டும் அமைதியாக முறையில் நடப்பதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். அதைத்தான் அதிகாரிகள் செய்திருக்க வேண்டும் என அது கூறிற்று.