‘நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளையும் விவசாயத்தையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்!’ – பிஎஸ்எம் வலியுறுத்து

கேமரன் மலை விவசாயிகளின் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதை, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) மிகக் கடுமையாக கருதுகிறது.

அச்செயலைக் கண்டிப்பதாக, பிஎஸ்எம் தலைமைச் செயலாளர்  சிவராஜன் ஆறுமுகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதுபோன்ற மோசமான சம்பவத்திற்குப் பக்கத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் மஇகா- வை மட்டும் குறை கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. மாறாக, பிஎச் அரசாங்கத்திற்கும் இதில் பங்கு உள்ளதை அவர்கள் உணர வேண்டும் என அவர் கூறினார்.

காரணம், விவசாயிகள் நில உரிமைகள் தொடர்பாக தெளிவான ஒரு சட்ட வரையறையைப் பிஎச் அரசாங்கம் வைத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறியதால்தான், இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கின்றன.

“தற்போது ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் பிஎச், நிலச் சட்டங்களை ஒழுங்கு செய்வதற்கான சக்தியைக் கொண்டிருக்கிறது, அதனை அவர்கள் மறுக்க முடியாது.

“மாநில மந்திரிபெசாரையும்  மஇகாவையும் குறை சொல்வதில் எந்தப் பலனும் இல்லை. அதே வேளையில், மாநில மந்திரிபெசாரும் மஇகா-வும் மக்களை கண்மூடித்தனமாக ஏமாற்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றார் அவர்.

“முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் ஜெயக்குமார் பதவியில் இருந்தபோது, விவசாயிகளையும் அவர்களின் விவசாய நிலங்களையும் பாதுகாக்கும் ஒரு சட்டத் திருத்த மசோதாவை முன்வைத்தார். ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.”

“இவ்விவகாரத்தில் பிஎச் வெறும் சாக்குபோக்குகளைக்  கூறாமல், மிகத் தெளிவான ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்,” என சிவராஜன் வலியுறுத்தினார்.

விவசாயம் என்பது ஒரு நாட்டிற்கு முதுகெலும்பு போன்றது. எனவே, அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவியாக, பாதுகாப்பாக இருக்கவேண்டுமேத் தவிர, அவர்களின் நிலங்களையும் பயிர்களையும் அழித்து விரட்டியடிக்கக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

“இது மிகத் தவறான அணுகுமுறை ஆகும். வெறுமனே சுற்றுச் சூழலையும் மக்களையும் குறை சொல்வதைக் காட்டிலும், மேம்பாட்டு நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் இட ஒதுக்கீடு செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதை விடுத்து, விவசாயிகளைக் கட்டுப்படுத்துவது எந்த வகையில் சரியான விஷயம் எனத் தெரியவில்லை,” என சிவராஜன் தெரிவித்தார்.