மக்களை பிளவு படுத்தும் கீழறுப்பு சக்திகளை ஒழிக்க புத்தாண்டிம் ஒன்று படுவோம் – சேவியர் வேண்டுகோள்

கடந்த தேர்தலில் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கும் பொருளாதார ஏற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் தேர்தல் வாக்குறிதிகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிதிநிலைமையும் இனவாத அரசியல் தாக்காமும் தடைகளாக இருந்தன. ஆனால் அதனையும் தாண்டி, அரசியல், இனம், சமயம், மொழி போன்ற வேற்றுமைகளாலும் சில கீழறுப்பு சக்திகளின் சதியாலும் மக்கள் இன்று வேறுபட்டு நிற்பதைக் காண முடிகிறது என்ற தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

மேலும் தனது செய்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இயற்கையாகவே, மக்கள் அன்றாட வாழ்வை சுமூகமாகச் சமாளிக்கக் கடுமையாகப் போராட வேண்டி உள்ள வேளையில், சிறு சலசலப்புகளுக்குக் கூடச் சந்தேகங்களுடன் நாம் சகோதரர்களை நோக்க வேண்டிய இக்கட்டில் இருந்தால் என்ன நடக்கும்? வெறுப்பும், வேதனையும் வேண்டாத சக்திகளின் ஊடுருவும் நாட்டில் அமைதியின்மைக்கே வழிவகுக்கும்.

சொஸ்மா என்ற பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள அந்த 12 நபர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இந்நாட்டு மக்கள் அனைவருக்கும்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்புத்தாண்டு 2020 சவால் மிக்க ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை அதனைச் சாதுரியமாகச் சமாளித்து வெற்றி நடைபோட மலேசியர்கள் அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான சேவியர் ஜெயக்குமார்.

நமது முன்னோர், ஆசியாவின் பல இன, சமய, மொழி மக்களைப் பிரதிபலிக்கும் வண்ணமே நாட்டுக்கு மலேசியா என்று பெயர் சூடினர். ஆசியா என்னும் பரந்த நிலப்பரப்பின் பலதரப்பட்ட அம்சங்களின் சமயங்களின், கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக விளங்கும் வண்ணம் அமைக்கப்பட்ட தேசம், இன்று அதன் பரந்த கொள்கை மற்றும் அடிப்படையிலிருந்து விலகி வெகு தூரம் திசை திருப்பப்பட்டு விட்டது. நீண்டகாலம் தவறாக வழி நடத்தப்பட்ட தேசத்தை மீண்டும் சரியான தடத்தில் பயணிக்க வைப்பதே, இன்றைய அரசுக்குச் சவால் மிக்க பணியாகும்.

மக்கள் இனம், சமயம், மொழி  என்ற வேற்றுமைகளைக் கைவிட்டு, ஒற்றுமை, நாடு, முன்னேற்றம் என்ற தடத்திற்குத் திரும்பினால், நாடு வேகமான முன்னேற்றத்தை அடையும், பொருளாதார வெற்றிகளைக் குவிக்கும். அதனால்,  அனைத்து மக்களும் இந்தப் புத்தாண்டில் வேற்றுமைகளுக்கு அதிக இடமளிக்காமல், ஒற்றுமையுடன் நாட்டு முன்னேற்றத்தை நோக்கி  அழைத்துச்செல்ல முற்பட வேண்டும்.

நாட்டின் முன்னேற்றமே நமது முன்னேற்றம்!  நம் சமுதாயமும், நாடும் பல வாராக ஏமாற்றப் பட்டுள்ளது. நம்மைச் சுரண்டியவர்கள், நாட்டைச் சுரண்டியவர்கள் இன்று வீர வசனம் பேசுகிறார்கள், வெளி வேசம் போடுகிறார்கள், இனங்களுக்கிடையே பிரச்சனைகளுக்குத் தீமூட்டுகிறார்கள். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, எரியும் நெருப்பில் குளிர்காய எத்தனிக்கிறார்கள்.

நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இத்தேசத்தில் சிறப்பாக வாழ அனைவருக்கும் இடமுண்டு, நாட்டில் வளமுண்டு, மார்க்கமுண்டு, சமத்துவமான தேசத்தில் அனைவருக்கும், எல்லா வாய்ப்பும், வசதிகளும் பெற வேண்டும். ஆனால் அது மறுக்கப்படுகிறது. நமது பிள்ளைகளும் அவர்களின் தலைமுறைகளும் அதனை மீண்டும் அடையச் சரியான அடித்தளமிட இப்போதுள்ள வாய்ப்பினை தவறவிட்டால் எதிர்காலச் சந்ததி நம்மை நிந்திக்கும் என்பதனை மனதில் நிறுத்தி, புதிய ஆண்டில், புது இலட்சியத்துடன் முழு சமுதாயத்தையும் மாற்றியமைக்க முற்படுவோம், 2020 யை மாற்றதிற்கான ஆண்டாக கொண்டாடுவோம் எனக்கேட்டுக்கொண்டார்.

அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பிலும் பாக்காத்தான்  சார்பிலும், புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்  சேவியர் ஜெயக்குமார்.