2020-ஆம் ஆண்டில், நாட்டின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் செழிப்பை அனுபவிக்க வேண்டுமாயின், வலுவான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் உருவாக்க அனைத்து மலேசியர்களும் பாடுபட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா பரிந்துறை விடுத்துள்ளார்.
ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நாட்டின் மீது பற்று, அன்பு ஆகியவற்றை பேண, மக்களிடையே நிழவும் இன ரீதியான பாகுபாடுகளை நீக்கி, புதிய ஆண்டின் தொடக்கத்தை கொண்டாட வேண்டும் என்று பேரரசர் ஆணையிட்டார்.
“கடந்து ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும், நாமும் நம் நாடும் அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும், ஒற்றுமைக்கும் மற்றும் செழிப்புக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். நாம் எப்போதும் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். நாம் கடந்து வந்த அனைத்து சம்பவங்கள் மற்றும் சவால்களிலிருந்தும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், இதனால் நாம் நம்மையும், நம் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நம் நாட்டையும் மேம்படுத்த முடியும்” என்று இன்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும், நட்புடனும், ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் அமைதியான சூழலில் மட்டுமே ஒற்றுமை செழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“குறிப்பாக நமது நாடான மலேசியாவில், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கத் தேவையான ஒரே வழிமுறை இதுதான் என்று நான் கருதுகிறேன். சமீப காலங்களில் இன மற்றும் மத தொடர்பான பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ள சூழ்நிலையில், கடந்த 62 ஆண்டுகளில் நாம் பெருமளவில் அனுபவித்து வரும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்க அனைத்து மலேசியர்களையும் நினைவூட்ட விரும்புகிறேன். முந்தைய நாட்டுத் தலைவர்களைப் போலவே, எனது அன்புக்குரிய நாடான மலேசியாவையும் தொடர்ந்து ஒற்றுமையாகவும், இணக்கமாகவும், முற்போக்கானதாகவும் காண விரும்புகிறேன், இந்த ஆசை அனைத்து மலேசியர்களிடையேயும் பகிர்ந்து கொள்ளப்படுவதாக நான் நம்புகிறேன்,” என்று பேரரசர் கூறினார்.
பல மத மற்றும் பல இன சமூகங்களையும் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளையும் கொண்ட மலேசியாவில் தொடர்ச்சியான செழிப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்த ஒற்றுமை இன்றியமையாதது என்பதை ஒவ்வொரு மலேசியரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பேரரசர் கூறினார்.
நாட்டின் முந்தைய தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர இளம் தலைமுறையினருக்கு பெரும் பங்கு உண்டு என்றும் அவர் கூறினார்.
நாட்டில் நல்லிணக்கம், அமைதி மற்றும் செழிப்மை ஊக்குவிக்கும் வகையில் நல்லெண்ணங்களை பேணவும், அதை மலேசியர்கள் ஒரு புத்தாண்டு தீர்மானமாக ஏற்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் மலேசியா என்ற இந்த புனித நிலத்தையும், அதன் தலைவர்களையும் மக்களையும் அல்லாஹ் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக என்றும், 2019ஆம் ஆண்டு மலேசியாவின் 16வது பேரரசராகவும், இஸ்லாமியத் தலைவர், மற்றும் மலேசிய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஒரு பெரிய பணியையிம் கடமையையும் தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
“எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே, நேரம் மிக வேகமாக நகர்கிறது. 2019 ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. புதிய தீர்மானங்களுடன் 2020 ஆம் ஆண்டில் நுழைவோம். ராஜா பெர்மைசுரி அகோங் (பேரரசி) மற்றும் நானும் இந்த வாய்ப்பிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் மலேசியர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று தன் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார் நம் மாட்சிமை தங்கிய பேரரசர்.