ஒரு புத்தாண்டு, ஒரு புதிய தசாப்தம் பிறந்து விட்டது. 2020இல் மலேசியா ஒரு வளர்ந்த நாடாக விளங்கும் என்பது டாக்டர் மகாதிர் முகம்மட் 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த ஒரு தொலைநோக்குத் திட்டம். ஒரு பெரிய கனவு. அக்கனவு இந்த 2020-இல் நனவாகப் போவதில்லை. என்றாலும், பிறந்துள்ள புத்தாண்டில் சில முக்கிய நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம்.
அவற்றில் சிலவற்றைக் கண்ணோட்டமிடலாம்.
பிளஸ் நெடுஞ்சாலைகளில் டோல் நீக்கப்படவில்லை ஆனால், 18 விழுக்காடு குறைக்கப்படும் என புத்ரா ஜெயா அறிவித்துள்ளது.
கார்களில் குழந்தை இருக்கைகள் இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இருக்கைகள் இல்லை என்றால் தண்டம் விதிக்கப்படும். ஆனால், முதல் ஆறு மாதங்களுக்கு சம்மன்கள் வெளியிடப்படா.
ஆனால், உணவகங்களில் புகை பிடிப்போருக்கு இனி சலுகை இல்லை. உணவகங்களில் புகை பிடித்தலுக்கு எதிரான தடை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.
2019-இல் மிகுந்த சர்ச்சையைத் தோற்றுவித்த ஜாவி எழுத்துக் கலை இவ்வாண்டிலிருந்து நான்காம் ஆண்டு மாணவர்கள் பாடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
தேசியப் பள்ளி மாணவர்களின் பகாசா மலேசியா பாட நூல்களில் மூன்று பக்கங்கள் ஜாவியில் இருக்கும்.
தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி கற்பிப்பது பெற்றோர்-ஆசிரியர் சங்க முடிவுக்கு விடப்படும்.
சாபாவும், அம்மாநிலத்தில் ஜாவி ஒரு விருப்பப் பாடமாக இருப்பதையே விரும்புகிறது.
துக்குத் தண்டனையை இரத்துச் செய்வதற்கான திட்டங்களும் மும்முரமாக விவாதிக்கப்படலாம். மார்ச் மாதத்தில் அதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்படலாம்.
மார்ச் மாத நாடாளுமன்றக் கூட்டத்தில், சாபா, சரவாக் மாநிலங்களை மலாயாவுக்குச் சரிசமமான பங்காளிகளாக நிலைநிறுத்த அரசமைப்புத் திருத்தம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆண்டு அந்தத் திருத்தச் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. அதில், சர்ச்சைக்குரியதாகவுள்ள பகுதிகளை நீக்கவும் 1963 மலேசியா ஒப்பந்தத்தை முழுமையாக நடப்புக்குக் கொண்டுவருவதற்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
பெர்சத்துக் கட்சி அதன் முதலாவது கட்சித் தேர்தலை ஜூன் மாதம் நடத்தும்.
டிஏபி-இலும் கட்சித் தேர்தல்கள் நடைபெறும். லிம் குவான் இரண்டு பொதுத் தேர்தல்கள் காரணமாக மூன்று தவணைகளுக்குத் தலைமைச் செயலாளராக இருந்து விட்டார். இனியும் அவர் அப்பதவியில் தொடர முடியாது. அந்த வகையில் டிஏபி தலைமையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
மே 9 வந்தால் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகள் நிறைவு பெறும். அப்போதுதான் அந்த மிகப் பெரிய கேள்வியும் எழும். டாக்டர் மகாதிர் முகம்மட் எப்போது பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைப்பார் என்பது அக்கேள்வி.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(ஏபெக்) கருத்தரங்கின் கூட்டங்கள், விவாதங்கள் நவம்பரில் முடிவடைந்ததும் அதிகார மாற்றம் நிகழலாம் என்று மகாதிர் ஏற்கனவே கோடிகாட்டியுள்ளார்.
ஆனால், ஹரப்பான் கூட்டணி நிலையற்றிருப்பதால் ஆண்டு நடுவில் ஏதாவது எதிர்பாராதது நடந்து அதிகார மாற்றம் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டால்கூட ஆச்சரியப்படுத்துவதற்கில்லை.