கிமானிஸ் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்

சனிக்கிழமை கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம்(இசி) வலியுறுத்தியது.

அன்றைய தினம் வேட்பாளர்கள் காலை மணி 9க்கும் 10க்குமிடையில் வேட்புமனுக்களைத் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என இசி தலைவர் அஸ்கார் அசிசான் கூறினார்.

வேட்புமனு தாக்கல் சுமூகமாக நடப்பதற்காகத்தான் விதிமுறைகள் உள்ளன என்றாரவர்.

அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், குறிப்பாக தேர்தல் குற்றச் சட்டம் 1954 பகுதி 24ஏ-க்குத் தனிக் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் சொன்னார்.

அச்சட்டம் அரசியல் பரப்புரைக்காக வாத்தியக் கருவிகள், ஒலிபெருக்கிகள், ஊர்திகள் போன்றவை பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பதில்லை.

வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வேட்புமனு மையங்களிலிருந்து 50மீட்டருக்கு அப்பால்தான் நிற்க வேண்டும்.

சட்டவிதிகள் மீறப்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் இசி தலைவர் எச்சரித்தார்.