பி.எஸ்.எம். : மஸ்லி – கருப்புக் காலணிகளுக்கு அப்பால்….

கருத்து | மலேசியாகினியில், மஸ்லி மாலேக் குறித்து வெளியான அனைத்து கருத்துகளையும் படித்தப் பின்னர்; இதனை எழுத எனக்கு உத்வேகம் வந்தது, கண்டிப்பாக இதுவும் அதே தொனியில் முடியும் என நான் நம்புகிறேன்.

மஸ்லி மாலேக்கின் திடீர் பதவி விலகல் என்னைப் போலவே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரைப் பிரதமர் பதவி விலக நிர்பந்தித்தார் என்று தெரிகிறது. மஸ்லி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து, இன்றுவரை, அந்தப் பதவியில் ஆர்வமுள்ள ஒரே நபர் மகாதீர் மட்டுமே. மஸ்லியின் பதவி விலகல் உரை, மகாதீர் அவரை வெளியேற்ற விரும்புவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது

மஸ்லி நிச்சயமாக இங்கே ஒரு பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார். அவர் எப்போதுமே தனது வேலையை அறியாத ஊமை அமைச்சர் போல தோற்றமளிக்கப்பட்டார். பரபரப்பான ஊடக அறிக்கை மற்றும் பெரும்பாலும் நியாயமற்ற தலைப்புகள் அவரை எப்போதும் தற்காப்பு இடத்திலேயே வைத்திருந்தன.

அமைச்சர்களின் செயல்திறன் குறித்த மலேசியாகினியின் கருத்துக் கணிப்பில், அவர் இரண்டாவது மிகக்குறைந்த இடத்தையே பெற்றார் – 28 பேரில் 27-வது இடம்…. இந்தக் கருத்து கணிப்பு புரிந்துகொள்ளக்கூடியது, ஏனென்றால் பெரும்பாலான மலேசியாகினி வாசகர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெரும்பாலும் மலாய்க்காரர் அல்லாதவர்கள் மற்றும் அவருக்கு எதிராக, ஒரு திட்டவட்டமான சார்புடையவர்கள். மஸ்லீ தனது இஸ்லாமியக் கொள்கைபிடிப்புகளுடன், நமது கல்வி முறையை இஸ்லாமிய மயமாக மாற்றப்போகிறார் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். பெரும்பாலான டிஏபி தலைவர்கள், அந்தக் கருத்து கணிப்பில் அதிக புள்ளிகளைப் பெற்றனர். கொஞ்சம் யோசித்து பாருங்கள்…. இதேபோன்ற கருத்துக் கணிப்பை ‘ஹராக்கா’ நடத்தியிருந்தால், அதன் முடிவு எப்படி இருந்திருக்கும்…… உங்களால் கணிக்க முடிகிறதா?

‘கருப்புக் காலணி’ பிரச்சனை அவரை ஒருபோதும் விடவில்லை, அது எப்போதும் அவரைக் கேலி செய்வதற்கும் குறைமதிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், நாம் மாணவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தினால், அவர்கள் ‘வெள்ளை’யைவிட, கருப்பு காலணிகளைத்தான் அதிகம் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். எப்படியிருந்தாலும், இப்போது அது இங்கே முக்கியமல்ல.

அவருக்குப் பதிலாக, மகாதீர் அப்பதவிக்கு வர முடிவு செய்துள்ளார். அதனை எளிதாக்க, ஜாவி பிரச்சினை, மெட்ரிகுலேஷன் எனப் பிற சர்ச்சைக்குரிய விஷயங்கள் அனைத்தையும் அவர் மீது சுமத்துவது போன்று தெரிகிறது. மகாதீரின் தீவிர ஆதரவாளர்கள் துன் டைம் மற்றும் ரஃபிடா அஜீஸ் இருவரும், தொடர்ந்து மஸ்லியைக் குறிவைத்து தாக்கி வந்துள்ளனர், இதுவும் அவர் மகாதிரின் ஆதரவை இலக்க மேலதிக காரணமாகும்.

நான் என் தனிப்பட்ட அனுபவத்தை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன், நம்மில் சிலர் ஏன் அவருக்காக ஒரு மென்மையான இடத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்கிறேன்.

அரசாங்கத் துறை சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணி (ஜே.பி.கே.கே.) ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தப் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறது, முக்கியமாக, பள்ளிகளில் துப்புரவாளர்களாக மற்றும் பாதுகாவலர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு. முந்தையக் கல்வி அமைச்சரைச் சந்திக்க நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் பாழாகிப் போக, எங்களைச் சந்தித்தவர்கள், முடிவெடுக்கும் நிலையில் இல்லாத அவர்களின் அதிகாரிகளும் துறை சார்ந்த சில தலைவர்களும் மட்டுமே.

ஆனால், பக்காத்தான் ஹராப்பான் கல்வி அமைச்சர் மஸ்லி, எங்களைச் சந்தித்து உரையாட வாய்ப்பு வழங்கினார். முன்னதாக அவரைப் பற்றி என் மனதில் உருவான மோசமான கற்பனையின் காரணமாக, சந்திப்புக்கு முன்னர் நான் மிகவும் சந்தேகத்துடனேயே இருந்தேன். சந்திப்பிற்கு முன்னமே, அவரது அலுவலகம் எங்கள் மகஜரையும் கோரிக்கைகளையும் கேட்டது, இது சாதாரணமான ஒன்றல்ல, சற்று வித்தியாசமான அணுகுமுறை.

எங்களைச் சந்திப்பதற்கு முன்னமே, அவர் எங்கள் மகஜரைப் படித்திருந்தார், எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரும்பாலான அமைச்சர்கள் செய்வது போல, அவர் தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் காட்டிக்கொள்ள முயற்சிக்கவில்லை, நடிக்கவில்லை. அவர் எங்களின் ஒவ்வொரு திட்டத்தைப் பற்றியும் பேசினார், அது குறித்து செயல்படுமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அடுத்த நாள் அமைச்சரவைக் கூட்டத்தில், எங்கள் திட்டங்களைக் கொண்டு செல்வதாகவும் கூறினார். பெரும்பாலான அமைச்சர்கள் சொல்வதுபோலதான் சொல்கிறார் என்று நினைத்தேன், ஆனால் அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஓர் ஊடக அறிக்கையை அவர் வெளியிட்டார், ஒட்டுண்ணிகள் மற்றும் செயல்படாத ‘குரோனி’ ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை அமைச்சரவையில் எழுப்பியதாகவும், அவர்கள் கருப்புப் பட்டியலிடப்பட்டு, மாற்றப்படுவார்கள் என்றும் கூறினார். முழு அமைப்பு முறையும் கவனிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளும் இடைத்தரகர்களை ஒழிக்க, தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்த வேண்டும் எனும் எங்கள் திட்டத்தை ஆராய ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கமான சாக்குபோக்குகளைக் கொடுக்காமல், தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினையை உண்மையில் பார்த்த முதல் அமைச்சர் இவர்தான்.

அப்போதிருந்து, அவருடைய சில அதிகாரிகளுடன் பணிபுரிந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது, குறிப்பாக ஷாசா, வாராந்திர அடிப்படையில் எங்களிடம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அலுவலக நேரங்களைக் கடந்தும் அவர் வேலை செய்தார், பள்ளியில் ஒப்பந்த முறை சிக்கல்கள் குறித்து நாங்கள் எழுப்பிய பல புகார்களைக் கேட்டறிந்தார். இந்த அணுகுமுறை, அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு வீணாக நேரங்கழிக்கின்றனர்’ (மாக்கான் காஜி பூத்தா), 9-லிருந்து 5 வரை வேலை செய்பவர்கள் போன்ற எங்கள் பார்வையை மாற்றியது. அதற்காக, நான் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

அவரை ஆதரிக்கும் தற்போதைய மனுவில் எழுப்பப்படாத பிற கருத்துகள் தொட்டு நான் இப்போது கூறுகிறேன். எடுத்துக்காட்டாக, மஸ்லி தலைமைத்துவத்தின் கீழ், மாணவ ஆர்வலர்கள் அதிகம் பாதுகாக்கப்பட்டனர்; மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திய போது, பல்கலைக்கழக அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒவ்வொரு முறையும் தடுத்து நிறுத்தினார். முந்தைய நிர்வாகத்தின் போது, அமைச்சர்கள் மாணவர்களுடன் இருந்ததில்லை, நிர்வாகத்துக்கு ஆதரவாகதான் எப்போதும் நின்றனர். ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு இருப்பதை மாணவர்கள் அறிந்துகொள்ள இது உதவியது.

பள்ளி அமைப்பு முறைகளிலும் மஸ்லி பல சீர்திருத்தங்களைச் செய்தார் என்றும் ஆசிரியர்கள் பலர் என்னிடம் கூறியுள்ளனர், ஆனால் அவை முறையாக நடக்கவில்லை, அதிகாரத்துவம் அதற்கு உதவவில்லை என்றும் என்னிடம் கூறப்பட்டது. ஆக, ஆசிரியர்கள் சங்கம் (என்.யூ.டி.பி.) அவரைப் பற்றி அதிகம் பேசுவதில் ஆச்சரியமில்லை. ஆசிரியர்கள் எழுப்பிய சில முக்கியப் பிரச்சினைகளை மஸ்லி எவ்வாறு எதிர்கொண்டார் என்பதைப் பல ஆசிரியர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அமைச்சரவைக்கு சில விஷயங்களைக் கொண்டுவந்த பின்னர், அவர் பல யூ-டெர்ன்களைச் செய்தார், மெட்ரிகுலேஷன் மற்றும் ஜாவி பிரச்சனைகளில் இதைக் காணலாம். அவர் தன்னைத்தானே எப்போதும் கூறிக்கொள்வதைப் போல, அவர் அனுபவமற்றவராக இருக்கலாம் அல்லது தங்கள் பதவியைத் தற்காத்துகொள்ள அமைதியாக இருக்கும் பல பி.எச். அமைச்சர்களைப் போல, அவர் அமைதியாக இருந்திருக்கலாம், குறைவாகப் பேசியிருக்கலாம். அவர் எதிர்கொண்ட சிக்கல்களில் பெரும்பாலானவை ஜாவி, மெட்ரிகுலேஷன் மற்றும் யூ.இ.சி. போன்ற கடினமான பிரச்சினைகள்.

இவை 60 ஆண்டுகளாக நீடித்து கிடக்கும் பிரச்சினைகள், பி.என். விட்டுச்சென்ற அதே இன விளையாட்டை பி.எச். விளையாடத் தொடங்கியதிலிருந்து, ஒரு குழுவாக அப்பிரச்சனைக்குத் தீர்வுகாண பி.எச்.-ஆல் முடியாமல் போனது. ஆகையால், எல்லா சந்தர்ப்பங்களிலும், மகாதீர் தலைமையில் அமர்ந்து, அமைச்சரவை முடிவெடுக்கும் போது, ​​மஸ்லி மட்டும் குற்றம் சாட்டப்படுவது நியாயமற்றது.

பிற சிக்கல்கள் – தரமான, இலவசக் காலை உணவு, மாணவர்களுக்காக ஹோட்டல் நீச்சல் குளங்களைத் திறத்தல், மாணவர்களைத் தர அடிப்படையில் வகுப்பு பிரித்தல் (ஸ்ட்ரீமிங்), தேர்வுகளைத் தவிர்ப்பது, மாற்றுத் திறனாளி மற்றும் முறையான ஆவணமற்ற குழந்தைகளுக்கானக் கல்வி எனக் கருப்பு காலணியுடன் ஒப்பிடும்போது இவை மிகப்பெரிய சாதனைகள்.

இதுவரை 24,998 சிறப்பு குழந்தைகளைப் பராமரிக்க, அவர் 10,200 வகுப்புகளைத் திறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் இந்த அனைத்து முயற்சிகளுக்காகவும் நான் அவருடன் இருக்கிறேன், ஏனென்றால் அக்கறையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கும் அனைவருக்குமான பொது இடங்களைத் திறப்பதற்கும் அவர் பங்களித்திருக்கிறார்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர் இரண்டு முறை பதவி விலகியுள்ளார். ஒருமுறை, மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUM) தலைவராக அவர் நியமிக்கப்பட்டது பற்றி, மாணவர்களும் பலரும் பல கருத்துகள் பேசினர். முதல் சந்தர்ப்பத்தில், மகாதீர் கூட அவரது நியமனத்தை ஆதரித்தார், ஆனால் அவர் பதவி விலகுவதாகச் சரியான முடிவை எடுத்தார், ஆனால், இந்த முறை வேறு வழியில்லை, மகாதீரே பதவி விலகலுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அது அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

ஊழல் அல்லது பிற அவதூறுகளின் காரணமாக நீக்கப்படவில்லை என்பதில் மஸ்லி மகிழ்ச்சியடைய வேண்டும். ‘டத்தோ’ போன்ற பதவிகள் ஏதுமின்றி எப்படி உள்ளே சென்றாரோ, அப்படியே வெளியே வந்துள்ளார்…. மஸ்லிக்கு வாழ்த்துகள்.

எழுத்து :- எஸ் அருட்செல்வன், மலேசிய சோசலிசக் கட்சி தேசியத் துணைத் தலைவர்

தமிழாக்கம் :- சாந்தலட்சுமி பெருமாள்