அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ அமைக்கப்படுவதை சபா எம்பி நிராகரிக்கிறார்

சபா அடையாளக் கார்டு திட்ட ஊழல் மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள போதிலும் அந்த மாநிலத்தில் அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வாக்குரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரச்னைக்கு அது தீர்வு காணும் வழி அல்ல என்று சபா அம்னோ எம்பி ஒருவர் கூறுகிறார்.

அதற்கு மாறாக நீண்ட காலமாகத் தொடரும் அந்தப் பிரச்னையை அரசாங்க அமைச்சுக்களே தீர்க்க வேண்டும் என கினாபாத்தாங்கான் எம்பி பாங் மொக்தார் ராடின் கூறினார்.

“அரச விசாரணை ஆணையம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளில் ஒன்று அல்ல. அதனை அனைத்துத் தரப்புக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அமைச்சுக்களின் அதிகாரிகள் கடமை உணர்வுடன் செயல்பட்டால் அமைச்சுக்கள் அந்த சபா பிரச்னையைத் தீர்க்க முடியும்.”

“காரணம் அந்தப் பிரச்னையில் பல தரப்புக்களும் அமைச்சுக்களும் சம்பந்தப்பட்டுள்ளன,” அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ள அவர் நிருபர்களிடம் கூறினார்.

“அமைச்சுக்கள் அந்த விஷயத்தை விவேகத்துடன் கையாள வேண்டும்,” என்றார் அவர்.

அந்தப் பிரச்னையைத் தீர்க்குமாறு ஆணையிடப்பட்ட அமைச்சுக்களின் பணிகள் குறித்து அவர் மனநிறைவு அடைந்துள்ளாரா என பாங் மொக்தாரிடம் வினவப்பட்ட போது அவர் அவ்வாறு கூறினார்.

“இதில் மனநிறைவு அடைந்துள்ளோமா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை.”

“அந்த அமைச்சுக்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். தாங்கள் இதுவரை செய்துள்ள பணிகள் பற்றியும் அவை நாடாளுமன்றத்துக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். ஏனெனில் சபா பிரச்னை சற்று சிக்கலானது என்பதால் யாரும் பாதிக்கப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை.”

பல உண்மையான சபா மக்கள் அதிகாரத்துவ அடையாளப் பத்திரங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பாங் மொக்தார் கூறிக் கொண்டார்.

“அந்தப் பிரச்னை முதலில் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு அடையாளக் கார்டுகளைக் கொடுங்கள். அப்போது அந்தப் பிரச்னை மீண்டும் எழாது என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்புக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வழங்கிய 10 பரிந்துரைகளில் அடையாளக் கார்டு திட்டத்தை விசாரிக்க ஆர்சிஐ-யை அமைக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

எல்லா பரிந்துரைகளையும் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அவற்றை அமலாக்குமாறு பல்வேறு அரசாங்க அமைப்புக்களுக்கு பணிக்கப்படும்.