எஸ். அருட்செல்வன் | தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் (எல்.டி.டி.இ) சோஸ்மா சிறைக்கைதிகளான செரம்பன் ஜெய சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், கடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் மற்றும் டிஏபி உறுப்பினர் வி. சுரேஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் விண்ணப்பங்களை செவிமடுக்க நேற்று காலை நான் அவர்களின் குடும்பங்களுடன் நடைபிணம் போல் ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு நடந்தேன்.
அவர்களின் வழக்குகள் முறையே காலை 9, 11 மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிக்க திட்டமிடப்பட்டது.
நேரம் செல்லச் செல்ல, ஒரு நீதிபதியை அடுத்து மற்றொரு நீதிபதி பேசுவதை கேட்டபோது, இந்த முழு சோஸ்மா விசாரணையும் ஊடகங்களையும் பொதுமக்களையும் மகிழ்விக்கும் ஒரு கேளிகூத்தாக மட்டுமே எனக்குத் தோன்றியது,.
குணசேகரன், சாமிநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோரின் விண்ணப்பங்களை கேட்ட நீதிபதி முஹம்மது ஜமீல், நீதிபதி அஹ்மத் ஷாஹிர் மற்றும் நீதிபதி சீக்வேரா ஆகிய மூன்று பேரும் ஒரே முடிவுகளுக்கு வந்ததாகத் தெரிகிறது. அதாவது, நீதிபதி மொஹமட் நஸ்லானின் முந்தைய முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்களா என்பதை அவர்கள் அறிய விரும்பினர்.
முந்தைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டியது இல்லை என்பதையும், அந்நீதிமன்றம் தற்போதைய நீதிமன்றத்தின் நிலையில் (status) ஒரே மாதிரியாக இருப்பதையும், சுட்டிக்காட்டினர். மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் போன்ற உயர் நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட தீர்ப்பால் மட்டுமே அவர்கள் கட்டுப்படுவார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதில் சோகமான உண்மை என்னவென்றால், கைதிகளில் சிலர் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்ற அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. அவர்கள் தங்கள் உடமைகளையும் சிறையில் இருந்து உடனெடுத்துவந்திருந்தனர்.
சோஸ்மா சட்டத்தின் 13வது பிரிவைச் சார்ந்துள்ள சட்டத்தின் கேள்விகளை நீதிமன்றங்கள் மீண்டும் அலசியதால் அந்த நம்பிக்கைகள் சிதைந்து போயின.
கைதிகளின் வழக்கறிஞரான ராம்கர்பால் சிங், நம் அனைவரையும் போலவே சோர்வாக இருந்தார். அவரும் ஒரு நீதிமன்றத்தில் இருந்து இன்னொரு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. தங்கள் அன்புக்குரியவர்களின் விடுதலையைப் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று குடும்பங்களுக்கு உறுதியளித்தார். ஆனால் விடுதலைக்கான பாதை சீராக இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
உயர்நீதிமன்ற முடிவுக்கு கட்டுப்படவில்லையா?
நவம்பர் 29, 2019 அன்று, நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். அவர் அன்று, ஜாமீன் கோருவதற்கு சாமிநாதனுக்கு ஒப்புதல் அளித்தார். முன்னதாக, சோஸ்மாவின் 13வது பிரிவு ஜாமீனை பரிசீலிக்க நீதித்துறைக்கு தடை விதித்திருந்தது.
அரசாங்கத்தின் பல்வேறு கிளைகளில் அதிகாரப் பிரிவினையை மீறுவதால் 13வது பிரிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று இந்த துணிச்சலான நீதிபதி அறிவித்தார்.
டிசம்பர் 13, 2019 அன்று, அட்டர்னி ஜெனரல் (ஏஜி) தாமி தாமஸ், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்முறையிட வேண்டாம் என்று அட்டர்னி ஜெனரலின் அலுவலகத்திற்கு உத்தரவிட்டதாகக் கூறினார்.
சோஸ்மாவின் கீழ் ஜாமீன் மறுக்கும் பிரிவு 13 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ஏஜி கருதுகிறது என்று இது பொருளாகிறது. “சோஸ்மா சட்டத்தை உருவாக்கியவர்களும், 2012 ஆம் ஆண்டு சட்டத்தை இயற்றிய நாடாளுமன்றமும் சில விசயங்களை கருத்தில் கொள்ளவில்லை. நீதிமன்றங்களின் நீதித்துறை செயல்பாடு, பிரிவு 13ஆல் அழிக்கப்படுகிறது எனவும் இதன் விளைவாக, நீதித்துறையின் அதிகாரம் சிதைந்துள்ளது எனவும் தாமி தாமஸ் கூறுகிறார்.
இந்த தீர்ப்பின் காரணமாக ஜாமீன் தானாக வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, தாமி தாமஸ் விளக்கமளித்தார். ஜாமீனை பரிசீலிக்க நீதித்துறைக்கு பரிந்துரை அளிப்பது தானாகவே ஜாமீன் வழங்குவதற்கு அர்த்தம் என்றிமில்லை, ஏனெனில் நீதிபதிகளுக்கு எப்போது அவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் புத்திசாலித்தனம் உள்ளது என்றார்.
குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் நிரபராதி என்ற கொள்கையை மதிக்காத சட்டமாக விளங்கிய ரத்து செய்யப்பட்ட ஐ.எஸ்.ஏ (ISA) போன்றே சோஸ்மா இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நேற்று நீதிமன்றங்களில் நிகழ்ந்த உண்மை மட்டும் ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது. யாங் ஆரிஃப் மொஹமட் நஸ்லான் கசாலி அவர்கள் ஒரு அறிவிப்பை வழங்கியதாலும், ஏஜி மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்பதாலும், பிரிவு 13 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ராம்கர்பால் வாதிட்டார்.
ஆனாலும் மூன்று நீதிபதிகளும் அந்த உயர்நீதிமன்ற முடிவிலிருந்தும், ஏ.ஜி.சியின் நிலைப்பாட்டிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு ஆகிய இரண்டும், பிரிவு 13 அரசியலமைப்பிற்கு முரணானது என்று ஒப்புக் கொண்ட போதிலும், தலைமை நீதிபதிகள் ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை.
குணசேகரனுக்கு ஏன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராம்கர்பால் சமர்ப்பித்தபோது, ஏஜிசி-யை பிரதிநிதிக்கும் துணை அரசு வக்கீல் மொஹமட் சைபுதீன் ஹாஷிம் முசைமி, குணசேகரனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று மிகவும் கடுமையாக வாதிட்டார். டிபிபி மற்றும் ஏஜி ஆகியவை ஒரே விஷயத்தில் முறன்பாடான நிலையில் உள்ளன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது எனலாம்.
இதையெல்லாம் பார்த்து, இந்த முழு சோஸ்மா கைது ஒரு கேளிக்கூத்து மற்றும் ஒரு நாடகம் எனவே கருதுகிறேன். இப்போது நாடகம் நீதிமன்றங்களுக்கு சென்றுவிட்டது. ஆரம்பத்தில், இந்த விஷயத்தில் பக்காத்தான் ஹரப்பன் தலைவர்கள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவை சந்தித்த பின்னர், மகாதீர் கைது விவகாரம் குறித்து வருத்தமடைந்து, சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானித்ததாகத் தெரிகிறது.
இப்போது அந்த 12 பேரும் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டும் என்றே தெரிகிறது. உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று இப்போது தெரிகிறது. ஏஜி மேல்முறையீட்டை தாக்கல் செய்யாதது என்பது இப்போது அதிகம் அர்த்தமில்லை என்றும் தெரிகிறது.
இந்த சனிக்கிழமையன்று அவர்கள் 100 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 12 சோஸ்மா கைதிகளுக்கும் ஜாமீன் மற்றும் அவர்களின் சுதந்திரம் மறுக்கப்படும் என்பது மட்டும் உறுதி.
பிரிவு 13இல் ஏஜி மற்றும் அவரது டிபிபி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிஎஸ்எம் கேட்டுக்கொள்கிறது.
சோஸ்மா சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் இந்த நாடகத்தையும் கேளிக்கூத்தையும் முற்றுமாக நிறுத்த ஹராப்பன் அரசாங்கத்திற்கு பிஎஸ்எம் கேட்டுக்கொள்கிறது. இது அவர்களின் கொள்கை அறிக்கையிலும் இருந்த ஒரு அம்சமானதால் கம்பசித்திரம் ஒன்றும் கிடையாதே.
2020 மார்ச்சில் நடைபெரும் அடுத்த நாடாளுமன்றத்தில் ஹரப்பன் இந்த கொடூரமான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல், முன்னாள் பாரிசான் ஆட்சியின் போது விசாரணையின்றி தடுத்து வைத்த சட்டங்களை ஹராப்பன் அரசாங்கமும் மகிழ்ச்சியுடன் தொடர்கிறது என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எஸ். அருட்செல்வன் மலேசிய சோசலிச கட்சியின் துணைத் தலைவர். இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் எழுத்தாளர் / பங்களிப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே இன்றி மலேசியாகினியின் கருத்துக்களை குறிப்பது இல்லை.