புவா: KR1M பாலில் இ-கோலி கலந்துள்ளது குறித்து லியாவ் பேச மறுக்கிறார்

KR1M என்ற கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளிலிருந்து சோதனைக்காகப் பெறப்பட்ட பால் மாதிரிகளில் இ-கோலி கலந்துள்ளதை சுகாதார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை பற்றி பேச சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் மறுப்பதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா குற்றம் சாட்டியுள்ளார்.

KR1M  கடைகளிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட 13 பொருட்களும் தவறான சிட்டைகளுக்காக மீட்டுக் கொள்ளப்பட்டதே தவிர உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக அல்ல என லியாவ் நேற்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறியதாக புவா குறிப்பிட்டார்.

“சிட்டைகளில் போதுமான விவரங்கள் இல்லாதது போன்ற உணவு விதிமுறைகளை மீறியதற்காக அந்தப் பொருட்கள் அகற்றப்பட்டனவே தவிர உணவுப் பாதுகாப்பு விஷயங்களுக்காக அல்ல என அவர் கூறியதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது”

“உண்மையில் பாலில் இ கோலி கண்டு பிடிக்கப்பட்டது பற்றி தி ஸ்டார் நாளேடு ஏதும் குறிப்பிடாதது அதிர்ச்சி அளிக்கிறது.”

KR1M கடைகளில் விற்கப்படும் 13 பொருட்கள் மீதான தங்களது புகார்கள் பற்றி கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சு அதிகாரிகளை புவா-வும் நுருல் இஸ்ஸா அன்வாரும் சந்தித்த போது இ கோலி பற்றிய தகவல் உறுதி செய்யப்பட்டது.

பால், ஐஸ் கிரீம், தண்ணீர்ப் பால், கெட்டிப் பால், நெய், பழஜாம், கிளிஞ்சல் சாறு, டின்களில் அடைக்கப்பட்ட சார்டின்கள், டின்களில் அடைக்கப்பட்ட கோழி இறைச்சி ஆகிய KR1M பொருட்களின் தரம் மற்றும் 1985ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் விதிமுறைகளை அவை மீறியுள்ளது பற்றி அந்த இருவரும் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தனர்.

பத்திரிக்கைகளுக்கு செல்லாமல் புவா அந்த விவகாரங்களைத் தனிப்பட்ட முறையில் அமைச்சிடம் தெரிவித்திருக்க வேண்டும்; ஏனெனில் அவ்வாறு செய்ததால் விநியோகிப்பாளர்கள் அந்தப் பொருட்களை அகற்றுவதற்கு வழி ஏற்பட்டு விட்டது;  அதனால் அமைச்சு விசாரணைகள் பாதிக்கப்பட்டதாக லியாவ் சொன்னார்.

அதற்குப் பதில் அளித்த புவா, அந்த பாலை விநியோகித்தவருக்கு கடும் எச்சரிக்கையை விடுத்திருக்க வேண்டும் அல்லது தண்டனை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்; அத்துடன் மீட்டுக் கொள்ளப்பட்ட KR1M பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் எனச் சொன்னார்.

“அமைச்சர் அதற்கு மாறாக ஒரே மலேசியா உணவுப் பொருட்கள் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக என் மீது ஆத்திரப்படுகிறார்.”

“நமது கடைகளில் விற்கப்படும் பொருட்களுடைய தரத்தையும் உணவுப் பொருள் பாதுகாப்பையும் உறுதி செய்வது தமது பொறுப்பு என்பதை அமைச்சர் உணர வேண்டும். அது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய வேலை அல்ல,” என்றும் புவா குறிப்பிட்டார்.

அவரது அமைச்சினால் கண்டு பிடிக்கப்படாமல் கடந்த ஆறு மாதங்களாக 14 வகையான பொருட்கள் KR1M கடைகளில் விற்கப்பட்டது, அமைச்சு தனது பணிகளைச் செய்யத் தவறி விட்டதை மெய்பிப்பதாக புவா சொன்னார்.

“பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் அதனை அம்பலப்படுத்தாமலிருந்து பொது மக்களும்  அழுத்தம் கொடுக்காமல் இருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க மாட்டாது.”

“ஆகவே லியாவ் அந்த சம்பவத்தை மறைக்கவும் கூடாது. எங்கள் மீது பழி போடுவதின் மூலம் அவர் தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் கூடாது”, என்றும் புவா குறிப்பிட்டார்.

இ-கோலி பாக்டிரியா கிருமிகள், வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக் கூடிய நச்சுப் பொருளை உற்பத்தி செய்ய முடியும். சில சமயங்களில் அவை மரணத்தையும் ஏற்படுத்தி விடும்.

பேரங்காடிகளில் காணப்படுகின்ற பிரபலமான மாதிரிப் பொருட்களுக்கு மாற்றாக பயனீட்டாளர்களுக்கு மலிவான விலையில் பொருட்களை விற்கும் நோக்கத்துடன் கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகள் அமைக்கப்பட்டன. அவை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிந்தனையில் உதித்தாகும்.