என்எப்சி திட்டத்தை ஆய்வு செய்ய அந்நிய நிபுணர்களை வழங்க சிலாங்கூர் முன்வருகிறது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் குறித்து புலனாய்வு செய்ய அந்நிய நிபுணர்களை வரவழைக்க நிதி ஒதுக்குவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது.

நிர்வாக அல்லது நிறுவனக் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கு அத்தகைய அணுகுமுறையை பல வளர்ச்சி அடைந்த நாடுகள் பின்பற்றியுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறினார்.

“நான் அந்த விவகாரத்தை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லியிடமும் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோனிடமும் விட்டு விடுகிறேன்,” என அவர் சொன்னார்.

“போலீசும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் கவனம் செலுத்த வேண்டிய முறையை  விளக்குவதற்காக அவற்றுடன் ராபிஸியும் சைபுதினும் பேச்சு நடத்துவர்.”

“மலேசியாவில் அத்தகைய அணுகுமுறை புதிதாகும். ஆனால் பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் பெரிதும் மதிக்கப்படுகின்றன”, என மந்திரி புசார் சொன்னாதாக டிவி சிலாங்கூர் செய்தி அறிக்கை கூறியது.

அந்த என்எப்சி ஊழல் விவகாரம் இந்த வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் சூடான தலைப்பாக விளங்கியது.

அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் கணவர், என்எப்சி-யின் நிர்வாகத் தலைவர் ஆவார். அந்த விஷயம் எதிர்க்கட்சிகள் சர்ச்சையைத் தூண்டி விடுவதாக ஷாரிஸாட் குற்றம் சாட்டியுள்ளார்.  என்றாலும் அந்த விவகாரத்தை அரசாங்கம் கையாளும் முறை குறித்த உள்ளுக்குள் அதிருப்தி நிலவுகிறது.

அந்த விவகாரம் அம்னோவுக்கு சுமையாக இருப்பதால் ஷாரிஸாட் பதவி துறக்க வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பாங் மொக்தார் ராடின் இரண்டு முறை கோரியுள்ளார்.

TAGS: