இந்தியா மீது மலேசியா விமர்சனம்: மகாதீர் தொனி மாறிவிட்டது என்கிறார் அன்வார்

இந்தியா மீது மலேசியா விமர்சனம்: மகாதீர் தொனி மாறிவிட்டது என்கிறார் அன்வார்

மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்த பின்னர், இந்திய அரசு குறித்த தனது விமர்சனத்தில் இருந்து பிரதமர் மகாதீர் முகமட் சற்றே பின்வாங்கி உள்ளதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அண்மைய பேட்டி ஒன்றில், மகாதீரின் தொனியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை புது டில்லி கவனிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

94 வயதான மகாதீர் அடுத்த சில மாதங்களில் பதவியில் இருந்து விலகுவார் எனக் கூறப்படுகிறது. அதையடுத்து தற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தாம் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா மீதான விமர்சனத்தை வேறு விதமாக கையாண்டிருக்க முடியும் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுடனான உறவு குறித்து மகாதீரும் நானும் விவாதித்தோம்”

இந்திய அரசை விமர்சிக்கும் விஷயத்தில் பிரதமர், இருதரப்பு ராஜீய உறவுகளுக்கான எல்லைகளைக் கடந்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள அன்வார், பொதுவாக இத்தகைய ஆட்சேபனைகளை எந்த நாடும் ஏற்றுக் கொள்ளாது என்று கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மகாதீர் உறுதியான வலுவான நிலைப்பாட்டை கொண்டிருந்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

“எனினும் கடந்த சில வாரங்களில் இருதரப்பு உறவுகளை சீர்செய்ய மலேசிய பிரதமர் மகாதீர் தம்மால் முடிந்தவரை முயன்றுள்ளார். சில கருத்துக்களைக் கூறினார் என்றாலும், தற்போது அதிலிருந்து அவர் விலகி நிற்கிறார் என்பதையும், தாம் கூறியதை அதே தொனியில் மீண்டும் மீண்டும் தெரிவிப்பதை அவர் தவிர்த்துள்ளார் என்பதையும் இந்தியத் தலைவர்கள் கவனத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்,” என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியுடனான உறவில் நிலவும் பதற்ற நிலை குறித்து, மகாதீரும் தானும் விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக ரீதியிலான உறவுகளை நல்ல முறையில் பேணுவது மலேசியா போன்ற நாட்டிற்கு மிக அவசியம் என்று கூறியுள்ளார். அதற்காக அந்நாடுகளின் கொள்கைகளை ஏற்க வேண்டும் எனும் அவசியமில்லை என்றும் அன்வார் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவேளை தாம் பிரதமர் பதவியில் இருந்திருந்தால், இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் விவகாரம் ஆகியவற்றில் அந்நாட்டை விமர்சிப்பது தொடர்பில் வேறு அணுகுமுறையை கையாண்டிருக்க முடியும் என்றார் அன்வார்.


பிரச்சனைக்கு என்ன காரணம்?

காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. பொதுப் பேரவையில் உரையாற்றியபோது மகாதீர் ரிவித்த கருத்து, மலேசியா – இந்தியா இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட முதல் காரணமாக அமைந்தது.
அதன் பிறகும் வெவ்வேறு தருணங்களில் இந்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார் மகாதீர். இது இந்திய அரசை சீண்டுவதாக அமைந்தது.

மேலும், காஷ்மீர் விவகாரத்தை அடுத்து, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அவர் விமர்சித்தார். இதையடுத்து கடும் அதிருப்தி அடைந்த இந்திய அரசு, மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் தனது எதிர்ப்பை இந்திய அரசு மறைமுகமாக வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும் இந்திய அரசுடன் நல்லுறவை பேணுவதே மலேசியாவின் விருப்பம் என்றும், இந்தியாவில் இருந்து கூடுதல் சர்க்கரையை இறக்குமதி செய்யப் போவதாகவும் அமைச்சர் திரேசா கோக் தெரிவித்தார்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளை மலேசியா போன்ற சிறிய நாடுகள் பகைத்துக் கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்து, பிரதமர் மகாதீரும் சமாதானக் கொடியை பறக்கவிட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் மலேசியாவின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படும் அன்வார் இப்ராஹிம் முதன் முறையாக, இந்தியாவுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் வந்து சென்ற பிறகு கருத்து தெரிவித்த அன்வார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு தினங்களுக்கு முன்புதான் மலேசியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். தமது வருகையின் போது உலகளவில் இஸ்லாமியர்களுக்கான உண்மையான தலைவராக மகாதீர் விளங்குவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் விவகாரம் குறித்து மகாதீர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தமைக்காக அவருக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட இம்ரான், இந்தக் காரணத்தினால்தான் மலேசியப் பிரதமரை மிகவும் நேசிப்பதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இம்ரான் கான் வந்து சென்ற பிறகு இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் அன்வார்.

இம்ரான் கான் மலேசியாவில் இருந்த வரை, இந்தியா குறித்து மகாதீர் புதிதாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. மேலும், காஷ்மீர் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் அவர் ஏதும் பேசவில்லை.

bbc.com/tamil