தைப்பூச விழாவையொட்டி மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. வழக்கம் போல் இந்தாண்டும் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் பினாங்கு உள்ளிட்ட இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய பிற பகுதிகளிலும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
மலேசியாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்களில் பக்தர்கள், பார்வையாளர்கள், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் என 15 லட்சம் லட்சம் பேர் பத்துமலையில் கூடுவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தாண்டு வழக்கமான நடவடிக்கைகளோடு, கூடுதல் சுகாதார முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் தனிப்பட்ட வகையில் தங்களது சுகாதாரத்தைப் பேண வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் வைரஸ் தொற்று ஏற்படுமோ என அச்சம் கொள்ளாமல் பக்திப் பரவசத்துடன் தைப்பூச விழாவில் பங்கேற்க வேண்டும் என இந்திய வம்சாவளித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளி ரத ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:
கோலாலம்பூரை ஒட்டியுள்ள பத்துமலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கடந்த ஆண்டு தைப் பூசத்தின் போது சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், இம்முறையும் அதே எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோவில் நிர்வாகத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வழக்கமான நடைமுறையின்படி பிப்ரவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து, முருகக் கடவுள் மற்றும் வள்ளி, தெய்வானையை தாங்கிய பிரமாண்டமான ரத ஊர்வலம் துவங்கியது. வழியெங்கிலும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
மேலும், வழியில் தண்ணீர் பந்தல்களும் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு தைப்பூசத்திற்காக முப்பரிமாண விளக்குகளுடன் ரதம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ரத ஊர்வலமானது கோலாலம்பூரின் சில பகுதிகளின் வழியே பத்துமலை முருகன் கோயிலைச் சென்றடையும்.
தைப்பூச கொண்டாட்டத்தில் பங்கேற்க அச்சப்பட வேண்டாம்: வேதமூர்த்தி
மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தகுந்த நிபுணத்துவத்துடன் அரசு கையாண்டு வருவதாக பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எனவே தைப்பூச விழாவில் பக்தர்கள் கொரோனா கிருமித் தொற்று அச்சமின்றி தைரியமாகப் பங்கேற்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் நிபுணத்துவ வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மலேசியா வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்கிறது.”
“எனவே தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இந்து பக்தர்கள் தயக்கம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், தேவை ஏற்பட்டால் தைப்பூச கொண்டாட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ மையங்களில் பக்தர்கள் தங்களைப் பரிசோதனை செய்துகொள்ளலாம்,” என்று அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சுய சுகாதாரத்தைப் பேணுதல் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா கிருமித் தொற்று அச்சம்: தயார் நிலையில் மருத்துவமனை:
இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் குறித்து பொதுமக்களும் பக்தர்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
பத்துமலை முருகன் கோவிலுக்கு அருகே உள்ள செலயாங் அரசு மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை சரியில்லாதவர்கள் வெளிப்புற தைப்பூச கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு மலேசிய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
விழாவில் பங்கேற்க விரும்புவோர் முகக்கவசம் அணிவது நல்லது என்று குறிப்பிட்ட அவர், பத்துமலைக்கு செல்லத் திட்டமிட்டுள்ள பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் இயன்றவரை அவ்வப்போது சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, ரத ஊர்வலத்தின் போது தேவையற்ற அசம்பாவிதங்கள், குழப்பங்களை ஏற்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய காவல்துறை எச்சரித்துள்ளது.
bbc.com/tamil