மலேசியாவிலிருந்து நாய்கள், பூனைகள் இறக்குமதி செய்வதை ஆஸ்திரேலியா நிறுத்தியது.
மலேசியாவிலிருந்து நாய்கள் மற்றும் பூனைகளை இறக்குமதி செய்வதை ஆஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்தியது. இறக்குமதி தொடர்புடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் பல விலங்குகளை நாட்டிற்குள் கொண்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி சட்டங்களை பூர்த்திசெய்து, தங்கள் செல்லப்பிராணிகளின் வருகைக்காக காத்திருக்கும் தனிப்பட்ட அனுமதி கோரியிருப்பவர்களையும் இந்த தடை பாதிக்கும்.
ஆஸ்திரேலியாவின் வேளாண்மை, நீர் மற்றும் சுற்றுச்சூழல் துறை “மலேசியாவிலிருந்து நாய்கள் மற்றும் பூனைகளை இறக்குமதி செய்வது தொடர்புடைய கடுமையான உயிர் பாதுகாப்பு அபாயங்கள்” குறித்த கவலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இது பிப்ரவரி 5 முதல் செயல்படுத்தப்படுகிறது.
“வேளாண்மை, நீர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு சமீபத்தில் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு நாய்கள் மற்றும் பூனைகள் இறக்குமதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்திருக்கின்றன. “… உயிர் பாதுகாப்பு அபாயங்களின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தனிப்பட்ட விலங்குகள் அல்லது உரிமையாளர்களின் வேண்டுகோளை பரிசீலிக்க முடியவில்லை” என்று தனது இணையதளத்தில் அறிவித்தது.
மலேசியாவில் ஏற்றுமதிக்கு முன்னர், நாய்கள் மற்றும் பூனைகள் மீது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனைகள், தடுப்பூசிகள், ஒட்டுண்ணி சிகிச்சைகள் போன்றவை இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அது மேலும் கூறியுள்ளது.
இருப்பினும், இந்த இடைநீக்கம் கே.எல் சர்வதேச விமான நிலையத்தில் பயணம் செய்யும் பிற நாடுகளைச் சேர்ந்த நாய்கள் மற்றும் பூனைகளை பாதிக்காது.
அங்குள்ள அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
“இப்போதைக்கு இந்த விவகாரம் எப்போது தீர்க்கப்படும் என்று ஆலோசனை வழங்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட மலேசிய அதிகாரிகளுடன் இந்தத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்றது.