கொரோனா வைரஸ் | கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க குடிமகன் சீன நகரமான வுஹானில் இறந்துள்ளார்.
இது, கிருமியினால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்கரின் முதல் மரணமாகும். பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் சனிக்கிழமை இச்செய்தியை வெளியிட்டது.
வுஹானில் நிமோனியா காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நபர் ஒருவரும் இறந்துவிட்டதாக ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறுபது வயதில் இருந்த அந்நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டார். ஆனால் நோயைக் கண்டறிவதில் சிரமங்கள் ஏற்பட்டதன் காரணமாக இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 700க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற தொற்றுநோயான கொரோனா வைரஸால் இறந்த முதல் ஜப்பானியர் இவராகும்.
இதனிடையே, ஜப்பானிய துறைமுகமான யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் வைரஸால் பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 64-ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, இப்போது சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே 27 நாடுகளுக்கு பரவி உள்ளது என்று ராய்ட்டர்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.