குடிநுழைவுத்துறை: சீன சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு பாஸ் தேவை
கொரோனா வைரஸ் | மலேசியாவில் சுகாதார பிரச்சினைகள் உள்ள சீன சுற்றுலாப் பயணிகளுக்கும் அல்லது மலேசியாவிலிருந்து வெளியெற விமானங்களை தவறவிட்டவர்களுக்கும் சிறப்பு பாஸ் வழங்கப்படும் என்று குடிநுழைவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைருல் சைமி டாவுட் தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள சீனத் தூதரகத்திலிருந்து ஆதாரச்சான்றுகளைப் பெறப்பட்ட பின்னரே சிறப்பு பாஸ் வழங்கப்படும்.
இதற்குமுன்னதாக, ஹூபே மாகாணம் மற்றும் வுஹான் நகரத்திலிருந்து வரும் சீன பயணிகள் மீது, மலேசிய அரசாங்கம் பயணத் தடையைத் விதித்திருந்தது.
சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் மலேசியாவிலிருந்து வெளியெற விமானங்களை தவறவிட்டவர்கள் தவிர, இன்னும் நாட்டில் இருக்கும் அனைத்து சீன சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்கள் நீட்டிக்கப்படாது.
“ஜனவரி 27 முதல், அவர்கள் (சீன சுற்றுலாப் பயணிகள்) அவர்கள் புறப்படும் விமான டிக்கெட்டுகள் மற்றும் சீனத் தூதரகத்திலிருந்து பெறப்பட்ட ஆதாரச்சான்றுகளுடன், சிறப்புத் பாசை விண்ணப்பிக்க குடிவரவு அலுவலகத்திற்கு வர வேண்டும்” என்று கைருல் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அந்தந்த புறப்படும் விமான தேதிகளின் அடிப்படையில், அவர்களுக்கு மலேசியாவில் 14 அல்லது 30 நாட்கள் தங்குவதற்கு சிறப்பு பாஸ்கள் வழங்கப்படும்.
முந்தைய அறிக்கையில், துணைப் பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில், ஹூபே மாகாணம் மற்றும் வுஹான் நகரத்திலிருந்து சீன பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை, மற்ற மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுத் தலைவரான டாக்டர் வான் அஜிசா தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட மாகாணத்தை சீன அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ‘பூட்டப்படுவதாக’ அறிவித்தவுடன் அதன்மீது மலேசிய குடிவரவு அதிகாரிகள் பயண தடையை அமல்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார். – பெர்னாமா