தாய்லாந்து துப்பாக்கிச் சூடு: 26 பேர் கொல்லப்பட்டனர், 57 பேர் காயமடைந்தனர் –
ஒரு நில ஒப்பந்தம் தொடர்பாக கோபமடைந்த ஒரு தாய்லாந்து இராணுவ அதிகாரி, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 26 பேரைக் கொன்றுள்ளார். அவர்களில் பெரும்பாலோர் வடகிழக்கில் ஒரு வணிக வளாகத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு தாய் நகரமான நக்கோன் ராட்சாசிமாவில் உள்ள டெர்மினல் 21 ஷாப்பிங் சென்டரில் இரவில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் இன்று காலை அந்த இராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்றனர்.
ராணுவ தளத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து திருடப்பட்ட தாக்குதல் ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளுடன் அவர் ஆயுதங்களை எடுத்து உபயோகித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குழுவாக மாலில் இருந்து தப்பி ஓடினர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்தின் போது காவல்துறையும் இராணுவமும் பல மீட்புகளைத் மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆயுதப்படை சிறிய குழந்தைகளையும் வெளிகொண்டு ஓடி வந்தன.
அந்த இராணுவ அதிகாரி 32 வயதுடைய ஜக்ரபந்த் தோம்மா என போலீசார் குறிப்பிட்டனர்.
நேற்று மதியம் 3 மணியளவில் அந்த ராணுவ வீரர் ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்தக் கொலைகள் தொடங்கியது. பின்னர் இராணுவ முகாமுக்குச் சென்று, அதன் பின் மாலுக்குச் சென்றுள்ளார்.
“ஒரு வீட்டு ஒப்பந்தம் தொடர்பாக, இது ஒரு தனிப்பட்ட மோதல்” என்று பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தாக்குதலுக்கு முந்தைய நாள், பேராசை கொண்டவர்களைக் கண்டித்து ஜக்ரபந்த் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
“ஏமாற்றி பணக்காரர்களாகிறார்கள். மற்றவர்களைப் பயன்படுத்துகிறார்கள். பணத்தை நரகத்தில் செலவழிக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்களா?” என்று எழுதியிருந்தார்.
பின்னர் அவர் தாக்குதலின் போதும் எழுதப்பட்ட புது பதிவுகளையும் வெளியிட்டார்.
“அனைவருக்கும் மரணம் தவிர்க்க முடியாத ஒன்று” என்று அவர் எழுதினார். பின்னர், அவர் தனது விரல்கள் வலிக்கின்றன என்றும் “நான் நிறுத்திவிடவா?” என்றும் எழுதியிருந்தார். அதன் பின்னர் அவரின் முகநூல் பக்கம் துண்டிக்கப்பட்டது.
“இவ்வகையான அட்டூழியங்களைச் செய்யும் நபர்களுக்கு பேஸ்புக்கில் இடமில்லை, இந்த தாக்குதலை மக்கள் புகழ்ந்து பேசவோ ஆதரிக்கவோ நாங்கள் அனுமதிக்கவில்லை” என்று ஒரு பேஸ்புக் பிரதிநிதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- ராய்ட்டர்ஸ்