உள்ளூர் முகக்கவச உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்து
கூலிம், பிப்ரவரி 14 – மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மூன்று அடுக்கு முககவச உற்பத்தியை அதிகரிக்க உள்ளூர் முககவச உற்பத்தியாளர்களை உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர்விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அதன் அமைச்சர் டத்தோ செரி சைபுதீன் நாசுடின் இஸ்மாயில், நாட்டில் முககவசம் தயாரிக்கும் ஐந்து முக்கிய தயாரிப்பாளர்களை அமைச்சு சந்தித்துள்ளது. மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய போதுமான பொருள் இல்லை என்ற புகார்களைத் தொடர்ந்து இது குறித்து தயாரிப்பாளர்களிடம் விவாதிக்கப்பட்டது.
“அவர்களின் கருத்துக்களைக் கேட்டபின், உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் அதிக முககவசங்களைத் தயாரிக்க அமைச்சு கேட்டுள்ளது, மேலும் அவர்கள் எவ்வளவு உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் கேட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
சில தயாரிப்பாளர்கள் ஒரு நாளைக்கு 200 முககவசங்களை தயாரிக்க முடியும் என்றும், மற்றவர்கள் வாரத்திற்கு 100,000 வரை தயாரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய சைபுதீன் நாசுடின், சில தயாரிப்பாளர்களிம் 200,000 துண்டுகள் வரை முககவசங்கள் தயாராக உள்ளன.
ஒவ்வொரு வாரமும் தயாரிப்பாளர்களால் அவர்களின் திறன்களுக்கு உட்பட்டு முககவசம் தயாரிப்பதை அமைச்சு கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
முககவச உற்பத்தியை அதிகரிக்க, தொழிற்சாலைகளில் 24 மணி நேர செயல்பாட்டு மாற்றங்களை அனுமதிக்க விண்ணப்பங்களை உடனடியாக அங்கீகரிக்க மனிதவள அமைச்சும் ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.
“அவர்களுக்கும் அவர்களின் பிரச்சினைகள் உள்ளன, உதாரணமாக உற்பத்தியை அதிகரிக்க, அவர்கள் பணி நேர மாற்றங்களைச் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் 24 மணிநேரமும் இயங்குவதற்காக மாற்றங்களைச் செய்வதற்கான ஒப்புதலை விரைவுபடுத்துவதற்காக மனிதவள அமைச்சகத்துடன் பேசும்படி அவர்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள்,” என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக, போதுமான விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருவதால் முககவசங்களை வாங்குவதில் பீதி அடைய வேண்டாம் என்று சைபுதீன் நாசுடீன் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்கள் தயாரிப்பாளர்களுடன் விலையைப் பற்றி விவாதிப்பார்கள். இதனால் முககவசங்களை இலவசமாகவோ அல்லது வேறு விதமாகவோ பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆலோசிக்கலாம், என்று அவர் கூறினார்..
“இந்த நோக்கத்திற்காக ஒதுக்கீடு செய்ய நான் நிதி அமைச்சுடன் கலந்துரையாடினேன்,” என்று அவர் கூறினார்.
விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டம் 2011 இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக பட்டியலிடப்பட்டுள்ள முககவசங்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் நிலைமையைப் சாதகமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று சைபுதீன் நாசுடீன் வணிகர்களுக்கு அறிவுறுத்தினார்.
- பெர்னாமா